ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை: உண்மை என்ன?

அரசியல் சமூக ஊடகம்

‘’ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும்,’’ என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு வைரல் பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
சுற்றி வளைத்து எங்கே போய் நிற்கிறானுகன்னு தெரியுதா? ரேஷன் கடைகளை மூடப்போறதா தேர்தல் அறிக்கையில் சொல்லியாச்சி. மக்களுக்குத் தேவையான பொருட்களை அந்த ஃப்ராடு சன்னியாசி நிறுவனம்தான் டோர் டெலிவரி செய்யப்போகுதாம்.. சிந்தித்து வாக்களியுங்கள்

Archived Link

பாஜக தேர்தல் அறிக்கை 2019 என பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், மோடியின் புகைப்படத்தை இணைத்து, அதன் அருகே ‘’ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும். குடும்பத்துக்கு தேவையான அற்றியாவசிய பொருட்களை பதஞ்சலி நிறுவனம் மூலம் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும்,’’ எனக் கூறியுள்ளனர். ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவை இதுவரை 3,700 பேர் வரை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

கடந்த ஏப்ரல் 8ம் தேதியன்று, பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை டெல்லியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் ரேஷன் கடைகளை ஒழிப்போம், என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து, சமூக ஊடகங்களில், #Sanghifesto என்ற பெயரில், பாஜக.,வின் தேர்தல் அறிக்கையை பலரும் கேலி செய்து, விதவிதமான ஃபோட்டோஷாப் பதிவுகளை வெளியிட்டனர். இதற்கான ஆதார பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

Archived Link

Archived Link

Archived Link

இப்படி பலவித கேலி பதிவுகள், பாஜக தேர்தல் அறிக்கையை ஒட்டி, சமூக ஊடகங்களில் டிரெண்டிங் செய்யப்பட்ட சூழலில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட, இந்த பதிவும் வெளியாகியுள்ளது.

இப்பதிவை மேலோட்டமாகப் பார்க்க உண்மை போல தோன்றினாலும், அதில் உள்ள எழுத்துப்பிழைகள் மற்றும் ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும் என்ற பகிரங்க அறிவிப்பு நமக்கு மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. ஆதார படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயிர்நாடியாக உள்ள ரேஷன் விநியோகத் திட்டத்தை, ஒழிப்பேன் என்று, இவ்வளவு பகிரங்கமாக யாரும் தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பில்லை. அதுவும், 2வது முறை ஆட்சியை கைப்பற்ற, போராடிவரும் பாஜக, இப்படி, பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கக்கூடிய அறிவிப்பை வெளியிட்டிருக்கவே முடியாது.

இருந்தாலும், இது உண்மைதானா என கூகுளின் உதவியை நாடினோம். அப்போது, இதுதொடர்பாக ஏராளமான செய்தி இணைப்புகள் கிடைத்தன. ஆனால், ஒன்றில்கூட ரேஷன் கடைகளை ஒழிப்பேன் என பாஜக கூறியதாகக் குறிப்பிடவில்லை.

இதுதவிர, நமக்கு கிடைத்த பாஜக.,வின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையிலும், இப்படி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இறுதியாக, இந்த பதிவை வெளியிட்ட நபரின் பின்னணி பற்றி பார்க்க முடிவு செய்தோம். சித்தாந்தம் சுயமரியாதை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் ஐடியில் எல்லாமே மோடி, அஇஅதிமுக எதிர்ப்பு பதிவுகளாக பகிரப்பட்டு வருகிறது. பாசிச பாஜக ஒழிக என்றும், பெரியாரிய ஆதரவாளன் என்றும் தன்னை, இந்த ஐடி வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு, பதிவுகளை பகிர்ந்து வருகிறது. ஆதார படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எனவே, தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக, இவ்வாறு சித்தரிக்கப்பட்ட பதிவை வெளியிட்டுள்ளதாக, சந்தேகமின்றி, தெரிய வருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு, தவறான, சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை: உண்மை என்ன?

Fact Check By: Parthiban S 

Result: False

 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares