
தமிழகத்தை விட கர்நாடகத்தில் பெட்ரோல் ரூ.8.24ம், டீசல் 9.58ம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு விலையை விட இங்கு பெட்ரோல், டீசல் விலை குறைவு என்று அறிவிப்பு பலகை ஒன்று பெட்ரோல் பங்கில் தொங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், கர்நாடக மாநிலத்தில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை போங்கடா முட்டாப் பசங்களா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அரசு எரிபொருட்கள் மீதான கலால் வரி வசூலில் பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் குறைத்து அறிவித்தது. மாநில அரசுகளும் மாநில அரசு வரியில் விலையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது. பஞ்சாப், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுகளும் விலையைக் குறைத்தன. அந்த வகையில் புதுச்சேரி மற்றும் கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான மாநில கலால் வரி தலா 7 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே பெட்ரோலுக்கு மட்டும் ரூ.3 விலை குறைக்கப்பட்டது. மத்திய அரசு விலை குறைத்த பிறகு புதிய விலை குறைப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான அடிப்படை விலையில் விலை குறைப்பு செய்திருந்தால் தானாகவே மத்திய, மாநில அரசுகளின் கலால் வரி குறைந்திருக்கும் என்ற கருத்தும் உள்ளது.
இந்த சூழலில் கர்நாடகாவில் தமிழ்நாட்டை விட பெட்ரோல் ரூ.8.24ம், டீசல் ரூ.9.58ம் குறைவாக உள்ளதாக பெட்ரோல் பங்கில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தை விட புதுச்சேரியில்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதைப் போன்று விலை குறைவாக உள்ளது. ஆனால், பதிவிட்டவர்கள் பா.ஜ.க ஆட்சி செய்யும் கர்நாடகத்தில் விலை குறைவாக இருப்பது போன்று பகிர்ந்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: goodreturns I Archive 1 I goodreturns I Archive 2 I goodreturns I Archive 3
கர்நாடகாவில் 2021 நவம்பர் 19ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு என்று பார்த்தோம். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.58க்கு விற்பனை ஆவதாக தகவல் கிடைத்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.4 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதாவது, தமிழகத்தைக் காட்டிலும் 82 காசுகள் குறைவாக பெங்களூருவில் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. அதுவே கர்நாடகாவுக்கு அருகில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.50க்கு விற்பனையாகி வருகிறது. கர்நாடகாவைக் காட்டிலும் ரூ. 2.47 அதிகம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டதை போல 8 ரூபாய் குறைவாக விற்பனையாகவில்லை.
டீசல் விலையை ஒப்பிட்டுப் பார்த்தோம். சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூருவில் 85.01க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சென்னையை விட பெங்களூருவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.6.42 குறைவு என்பது தெரியவந்தது. கிருஷ்ணகிரியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.50க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் கர்நாடகத்தைக் காட்டிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.8.49 அதிகமாக இருப்பது தெரியவந்தது.
தமிழ்நாட்டை விட கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவுதான். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்ட அளவுக்கு இல்லை என்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: goodreturns I Archive 1 I goodreturns I Archive 2 I goodreturns I Archive 3
அடுத்தது இந்த புகைப்படம் புதுச்சேரியில் எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைத் தேடினோம். ஆனால், எங்கு எடுக்கப்பட்டது என்று நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், புதுச்சேரியில் தமிழ்நாட்டை விட பெட்ரோல், டீசல் விலை குறைவு என்று பெட்ரோல் பங்குகளில் விளம்பரம் செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்தது. புதுச்சேரிக்கும் தமிழகத்துக்கும் உள்ள பெட்ரோல், டீசல் விலை நிலவரத்துடன் அது ஒத்துப்போனது. எனவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.
அசல் பதிவைக் காண: Facebook
புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 94.94க்கு விற்பனையாகிறது. புதுச்சேரிக்கு அருகில் உள்ள தமிழ்நாட்டின் பகுதியான கடலூரில் ஒரு லிட்டர் ரூ.103.86க்கும் விழுப்புரத்தில் ரூ.103.60க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தமிழகத்தை விட புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தமிழகத்தின் கடலூரை விட ரூ. 8.92ம் விழுப்புரத்தை விட 8.05ம் குறைவாக விற்பனை செய்யப்படுவது உறுதியானது.
அசல் பதிவைக் காண: goodreturns I Archive 1 I goodreturns I Archive 2 I goodreturns I Archive 3
டீசல் விலையைப் பார்த்தோம். புதுச்சேரியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.83.58க்கு விற்பனையாகிறது. இதுவே கடலூரில் ரூ.93.82-க்கும், விழுப்புரத்தில் 92.97க்கும் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. கிட்டத்தட்டக் கடலூரை விட ரூ.10.24-ம், விழுப்புரத்தை விட 9.39 ரூபாய் குறைவாக விற்பனையாவதும் தெரிந்தது. இந்த விலை நிலவரம் புதுச்சேரியுடன் ஒத்துப்போகிறது. இதன் மூலம் இந்த புகைப்படம் புதுச்சேரியில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
அசல் பதிவைக் காண: goodreturns I Archive 1 I goodreturns I Archive 2 I goodreturns I Archive 3
நம்முடைய ஆய்வில் தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருப்பது உறுதியானாலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்பது உறுதியாகிறது. மேலும், புதுச்சேரியில் வைக்கப்பட்ட விளம்பரத்தைக் கர்நாடகாவில் வைக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் டீசல் முறையே ரூ.8.24, ரூ.9.58 விலைக் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் 8 ரூபாய் விலை குறைவா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
