
இந்துக்களை நேபாளம், தாய்லாந்துக்கும் இஸ்லாமியர்களை பாகிஸ்தான், வங்கதேசத்துக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏஏ விவகாரம்: விஜய் தந்தை பேட்டி. ஹிந்துக்கள் நேபாளம், தாய்லாந்திலும், முஸ்லிம்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ்க்கும் அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா நிம்மதியாக இருக்கும் – எஸ்.ஏ.சந்திரசேகர்” என்று உள்ளது.
இந்த பதிவை, Billa Vinoth என்பவர் 2020 பிப்ரவரி 28 அன்று வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “இவனோட பங்குக்கு, இவனால் முடிந்தது
கிருஸ்துவர்க்கும், மற்ற மதத்தினர்க்கும்,
#சின்டு_முடிக்கும் வேலைய சிறப்பா செய்யுரான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டு அசல் போல தெளிவாக இல்லை. உண்மையானது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக தெளிவின்மை வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது போல் உள்ளது. இதனால், இதில் உள்ள தேதி, நேரம் உள்ளிட்டவை தெரியவில்லை. நியூஸ் 7 தமிழ் வெளியிடும் ஃபாண்ட் போல இல்லை.
வழக்கமாக தகவல் வெளியிடும் இடத்தையும் தாண்டி, எந்த எந்த டிடிஎச், தொலைக்காட்சி கேபிள் சேவையில் எந்த எண்ணில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தெரிகிறது என்ற குறிப்பிட்டுள்ள பகுதி வரைக்கும் தகவல் நீட்டிக்கப்பட்டு, எஸ்.ஏ.சந்திரசேகர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாக்கியப் பிழை வேறு உள்ளது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

இந்த நியூஸ் கார்டில் தேதி தெரியவில்லை என்பதால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இணைய – சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பி இதன் நம்பகத்தன்மையை கேட்டோம்.
அப்போது அவர், “இது போலியான நியூஸ் கார்டு. போலிகள் உருவாவதைத் தவிர்க்க அடிக்கடி எங்கள் டிசைனை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும், விடாமல் போலிகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன” என்றார்.
ஹிந்துக்கள், இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. அப்படி அவர் கூறியிருந்தால் அதுவே மிகப்பெரிய பிரச்னையாகி இருக்கும். இதை உறுதி செய்ய எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அதுபற்றி ஒரு சின்ன பிட் செய்தி கூட நமக்கு கிடைக்கவில்லை.
Archived Link | Search Link |
அதே நேரத்தில், “நானும் என் குடும்பத்தினரும் மதம், சாதி பார்ப்பது இல்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறும் பேட்டி மட்டுமே நமக்கு கிடைத்தது. புதிய தலைமுறைக்கு அளித்திருந்த அந்த பேட்டியில், தன்னுடைய மகன் விஜய் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர் இந்து முறைப்படி நடந்தது என்றும், தன்னுடைய மனைவி ஷோபாவை இந்து முறைப்படி திருமணம் செய்தேன் ஆதாரத்துடன் அளித்திருந்தர். தன்னுடைய மனைவியின் பூஜை அறை படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

நம்முடைய ஆய்வில்,
இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
போலியான நியூஸ் கார்டு என்று நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது.
இந்துக்கள், இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதன் அடிப்படையில், “ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்துக்களை நேபாளத்துக்கு அனுப்ப வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னாரா?
Fact Check By: Chendur PandianResult: False
