
திறனற்ற திமுக ஆட்சியில் சாலையை சீரமைக்க நூதன முறையில் போராட்டம் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் ஒருவர் துணி துவைத்து நடத்திய போராட்டத்தின் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “திறனற்ற திமுக அரசு பிரதான சாலையை சீரமைக்க வேண்டி நூதன போராட்டம்! 😃🔥👍
#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #திருட்டுதிமுக #ByeByeStalin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க ஆட்சியில் சாலையை சீரமைக்கக் கோரி ஒருவர் சாலையில் தேங்கிய நீரில் துணி துவைத்து போராட்டம் நடத்தியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.
வீடியோவில் அரசினர் மத்திய அச்சகம் என்று ஒரு அரசு அலுவலகத்தின் கட்டிடம் தெரிகிறது. சற்று உற்றுப் பார்க்கும் போது “புதுச்சேரி அரசு” என்று தெரிகிறது. அரசு அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் முழு முகவரியும் அதில் தெளிவாக இல்லை. ஆனால், புதுச்சேரியில் அந்த கட்டிடம் இருப்பது மட்டும் தெளிவானது.
கூகுள் மேப்பில் புதுச்சேரி அரசு அரசினர் மத்திய அச்சகம் என்று டைப் செய்து தேடினோம். அப்போது புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி என்ற இடத்தில் அந்த அலுவலகம் இருப்பது தெரியவந்தது. அதன் ஸ்ட்ரீட் வியூ பார்த்தபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சியும், தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள அரசினர் மத்திய அச்சக கட்டிடத்தின் முகப்பு பகுதியும் ஒன்றாக இருந்ததைக் காண முடிந்தது.
இதன் அடிப்படையில் கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட எல்லா செய்தி, சமூக ஊடக தளங்களிலும் “தட்டாஞ்சாவடி, சாலை, போராட்டம்” என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் புதுச்சேரி ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், “தட்டாஞ்சாவடி பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கியுள்ளதால் சுத்தம் சுந்தர்ராஜன் துணி துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ தமிழ்நாட்டைச் சார்ந்தது இல்லை என்பது உறுதியானது.
தமிழ்நாட்டின் சாலைகள் எல்லாம் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்யவில்லை, இந்த வீடியோ தமிழ்நாட்டைச் சார்ந்ததா இல்லையா என்று மட்டுமே ஆய்வு செய்துள்ளோம். நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ புதுச்சேரியை சார்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
புதுச்சோியில் சாலையை சீரமைக்கக் கோரி சமூக ஆர்வலர் ஒருவர் நடத்திய போராட்டத்தின் வீடியோவை தமிழ்நாட்டில் நடந்தது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:திமுக ஆட்சியில் சாலையை சீரமைக்க கோரி துணி துவைக்கும் போராட்டம் நடத்தப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
