டீ, சமோசா தரவில்லை என்று திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டார்களா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என்று கூறி திருப்பூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா. திருப்பூர் மாமன்ற கூட்ட அரங்கிற்கு வரும் தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என கூறி அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா. திமுக கவுன்சிலர்களுக்கு சரியாக தரப்படுவதாகவும் தங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அதிமுக கவுன்சிலர்கள் வேதனை!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

நிலைத் தகவலில், “இவனுகவேற காமெடி பண்ணிகிட்டு. சமோசா தரலைன்னு கருப்புச்சட்டை அணிந்து வந்திருக்கானுங்க. கருப்பு வண்ணத்துக்கான மரியாதையே போச்சே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சொத்து வரி உயர்வைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தியதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில், டீ, சமோசா தரவில்லை என்று அவர்கள் போராட்டம் நடத்தியதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நியூஸ் கார்டில் இடம் பெற்ற தகவலைப் பார்க்கும் போதே யாரோ விஷமமாக எடிட் செய்திருப்பது தெரிகிறது. இருப்பினும் ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை அதன் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்தோம். அதில், “சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாமன்ற கூட்ட அரங்கில் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா. திருப்பூர் மாமன்ற கூட்ட அரங்கில், தலையில் துண்டை போட்டுக்கொண்டு தரையில் அமர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் முழக்கம்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். வாட்ஸ்அப்-ல் அவரும் “இது போலியானது, புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று நமக்கு பதில் அளித்தார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தியது தொடர்பான நியூஸ் கார்டை மாற்றி, டீ – சமோசா தரவில்லை என்பதால் போராடியதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:டீ, சமோசா தரவில்லை என்று திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டார்களா?

Fact Check By: Chendur Pandian  

Result: False