தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சௌமியா அன்புமணி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "வன்னியர் ரௌத்திரத்தைக் கமலாலயம் தாங்காது. மருத்துவர் அய்யாவால் அமைதி காக்கிறோம் எல்லை மீறினால் வாலைஒட்ட நறுக்குவோம். எங்களின் வரலாற்றை அறிந்துகொண்டு நாவடக்கிப் பேசுங்கள்! - சௌமியா அன்புமணி குறித்து சர்ச்சை பதிலளித்த அண்ணாமலைக்கு வன்னியர் சங்கம் கடும் எச்சரிக்கை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாமக சார்பில் அக்கட்சித் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தர்மபுரியில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘’பேத்திக்கு திருமணத்தை முடித்துவிட்டு அரசியலில் வந்துள்ளார் சௌமியா,’’ என்பது போன்று ஒரு பதில் அளித்தார். அண்ணாமலையின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சௌமியா அன்புமணி பற்றி தவறாகப் பேசிய அண்ணாமலைக்கு வன்னியர் சங்கம் கண்டனம் என்பது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் புதிய தலைமுறை பயன்படுத்துவது போல இருந்தாலும் சில வித்தியாசங்களைக் காண முடிகிறது. எனவே, இது போலியானது என்று தெரிந்தது.

இதை உறுதி செய்ய புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். மார்ச் 26, 2024 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

இதை உறுதிசெய்துகொள்ள புதிய தலைமுறை நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று கூறி, இது ஃபேக் என்று முத்திரையுடன் மறுப்பு நியூஸ் கார்டை நமக்கு அனுப்பினார். புதிய தலைமுறை இணையதளத்திலும் இது ஃபேக் நியூஸ் கார்டு என்று பதிவை வெளியிட்டனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அண்ணாமலைக்கு வன்னியர் சங்கம் கண்டனம் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலைக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False