மோடிக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

மோடிக்கு ஓட்டுப் போட்ட விரல் இனி இருக்கக் கூடாது என்று கூறி வாக்களித்த விரலை வெட்டிக் கொண்ட வட இந்திய நபர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

தன்னுடைய கை விரலை தானே ஒருவர் வெட்டிக்கொள்ளும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*மோடிக்கு ஓட்டுப் போட்ட இந்த விரல் இனி இருக்கக் கூடாது என்று கூறிக்கொண்டு ஓட்டு போட்ட அந்த விரலை வெட்டி எடுக்கும் மானஸ்த்தன் வடக்கன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நரேந்திர மோடிக்கு வாக்களித்த விரலை வட இந்தியர் வெட்டிக்கொண்டார் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். கொடூரமான காட்சிகளைக் கொண்ட அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். பாஜக-வுக்கு வாக்களித்ததால் தான் அவர் விரலை வெட்டிக்கொண்டாரா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் உண்மைதான்… ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்டார் என்ற தகவல் தவறானது என்று தெரியவந்தது.

மும்பையைச் சார்ந்த நந்தகுமார் நானாவரே என்பவர் கடந்த 2023ல் தன்னுடைய மனைவியுடன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய தற்கொலைக்கு இவர்கள்தான் காரணம் என்று நான்கு பேரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

https://twitter.com/fpjindia/status/1692770088322220274/history

Archive

ஆனால், போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இறந்துபோனவரின் சகோதரர் தனஞ்சய் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பல தரப்பையும் சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் தன் விரலை வெட்டி அதை வீடியோ எடுத்து மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார். மேலும், இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாக்களித்த விரலை வெட்டி மோடிக்கு பரிசாக அனுப்புவேன். நடவடிக்கை எடுக்கும் வரை உடலின் ஒவ்வொரு பகுதியையும் வெட்டி அனுப்புவேன் என்று அவர் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் கூறுகின்றன.

உண்மைப் பதிவைக் காண: dailythanthi.com I Archive 1 I indiatoday.in I Archive 2

விரலை வெட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகவே, மகாராஷ்டிர அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. நான்கு பேரை மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்தது என்று செய்திகள் நமக்கு கிடைத்தன.

தன் சகோதரர் மற்றும் அவரது மனைவி தற்கொலைக்கு நீதி வேண்டி அந்த நபர் விரலை வெட்டி செயலை, மோடிக்கு வாக்களித்ததால் இனி அந்த விரல் இருக்கக் கூடாது என்று வெட்டினார் என தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையின் ஒரு பகுதியை மறைத்து தவறான அர்த்தம் வரும் வகையில் பதிவிடப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தன் சகோதரன் தற்கொலை செய்து கொண்டதற்கு நியாயம் கேட்டு விரலை வெட்டிக்கொண்ட நபரின் வீடியோவை மோடிக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிய வட இந்தியர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடிக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply