நயினார் நாகேந்திரன் மேலாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதில் தனக்கு எந்த தொடர்புமில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், "நயினாரை சிக்கவைத்தது நானா? நயினார் நாகேந்திரன் மேலாளரிடம் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. தேர்தலில் பணம் புழங்கக்கூடாது, வாக்களிக்க பணமளிக்க கூடாது என்று நினைப்பவர்கள் யாரேனும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருக்கலாம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவரது உறவினர் மற்றும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபரிடம் இருந்து ரூ.3.99 கோடி கைப்பற்றப்பட்டது. இதற்குக் காரணம் அண்ணாமலைதான் என்று சமூக ஊடகங்களில் நையாண்டியாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் உறவினரிடம் இருந்து ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டதில் தனக்குத் தொடர்பில்லை என்று அண்ணாமலை கூறியதாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நியூஸ் கார்டை பார்க்க புதிய தலைமுறை வெளியிட்டது போல உள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் நயினார் நாகேந்திரனுடையது என்று பொருள் வரும் வகையில் அண்ணாமலை பேட்டி அளித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போன்று புதிய தலைமுறை நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில், "நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலை: அண்ணாமலை. நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள, புதிய தலைமுறை நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பிவைத்தோம். எத்தனை போலி நியூஸ் கார்டுகளைத்தான் வெளியிடுவார்களோ என்று புலம்பிய அவர், இதுவும் போலியானது தான் என்றார். மேலும், சிறிது நேரத்தில் இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியிட்ட பதிவின் லிங்க்கை நமக்கு அனுப்பினார்.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அண்ணாமலையின் பேட்டியைப் பார்த்தோம். அதில் எங்கேயும் பணம் கைப்பற்றப்பட்டதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறவில்லை. அவரது பேட்டியில், "இது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பதிலளித்திருக்கிறார். ஒரு சதி வலையில் நயினார் நாகேந்திரனின் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. ‘எனக்கும், அந்தப் பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று நயினார் நாகேந்திரன் சொல்லிய பிறகு, அதற்குமேல் அது குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை" என்றார்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும் நயினார் நாகேந்திரனின் பணம் சிக்கியதற்கு நான் காரணம் இல்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்ததாக பரவும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு இரண்டும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நயினார் நாகேந்திரனின் மேலாளரிடம் இருந்து ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அண்ணாமலை விளக்கம் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘சென்னையில் ரூ.4 கோடி பறிமுதல்; எனக்குத் தொடர்பில்லை’ என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False