என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார், அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Tamilisai 2.png

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழிசை சௌந்தரராஜன் புகைப்படத்துடன் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், "அண்ணாமலைக்கு நடந்தது தெரியுமா? என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார். அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது. சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆந்திர பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் நிகழ்ச்சியில் வணக்கம் கூறிய தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், கை விரலை ஆட்டி முறைத்தபடி அமித்ஷா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சென்னை வந்த தமிழிசை சௌந்தர ராஜனைப் பேட்டி எடுக்க விமான நிலையத்தில் நிருபர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், பேட்டி எதுவும் அளிக்காமல் விரைந்து காரில் சென்றார் தமிழிசை. அப்படி இருக்க விமான நிலையத்தில் தமிழிசை பேட்டி அளித்தார் என்ற தகவல் நம்பும் வகையில் இல்லை. அப்படியே அளித்திருந்தாலும் அண்ணாமலைக்கு விழுந்த திட்டைப் பற்றி பேசியிருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த நியூஸ் கார்டு போலியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதை உறுதி செய்ய, புதிய தலைமுறை 2024 ஜூன் 12ம் தேதி மாலை 4.30 மணி அளவில் வெளியிட்ட நியூஸ் கார்டை பார்வையிட்டோம். மாலை 4.30க்கு இரண்டு நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. அதில் தமிழிசை பேட்டி தொடர்பான நியூஸ் கார்டு இல்லை. எனவே, இது தொடர்பாக புதிய தலைமுறை பொறுப்பாளர் பரிசல் கிருஷ்ணாவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அனுப்பினோம்.

Tamilisai 3.png

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

அதை பார்த்த அவர், இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று உறுதி செய்தார். மேலும், சிறிது நேரத்தில் புதிய தலைமுறை இணையதளத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டுப் பதிவிட்ட விவரத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன!

முடிவு:

என்னையாவது அமித்ஷா வெளிப்படையாக திட்டினார், ஆனால், அறைக்குள் அண்ணாமலைக்கு நடந்ததை எல்லாம் வெளியே சொல்லக் கூட முடியாது என்று சமாளித்த தமிழிசை என பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலைக்கு நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது என்று தமிழிசை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False