
‘’மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்று பெயர் மாற்றம்,’’ எனும் தலைப்பில் புதிய தலைமுறை ஊடகம் பகிர்ந்திருந்த செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவை பார்க்கும்போது, அரசாங்கம், பெரியார் ஈவெரா சாலை என பெயரை முன்வந்து மீண்டும் மாற்றியதாக, அர்த்தம் கிடைக்கிறது. இதனை வாசகர்கள் பலரும் குறிப்பிட்டு கமெண்ட் பகிர்வதையும் கண்டோம்.

இதன் தொடர்ச்சியாக, புதிய தலைமுறை மற்றொரு செய்தியும் வெளியிட்டுள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இந்த செய்தியிலும், குறிப்பிட்ட பெயர்ப் பலகையில், ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்றே குறிப்பிடவில்லை. இதனால், இதனை மாற்றியது அரசாங்கமா அல்லது பொதுமக்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
புதிய தலைமுறை போலவே, பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியிலும், இதனை அரசாங்கம் (நெடுஞ்சாலைத் துறை) மாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஈவெரா பெரியார் சாலையின் பெயரை மாற்றி Grand Western Trunk Road என குறிப்பிட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது. இதனை பெரியாரிய அமைப்புகள் கண்டித்து, கறுப்பு மை பூசி அழித்த செய்தியும் ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில், கறுப்பு மை பூசி அழிக்கப்பட்ட பெயர்ப் பலகையில், ஈவெரா பெரியார் சாலை என அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை எடுத்து வந்து, யார் ஒட்டியது என்பது தெரியாமல், தமிழ் ஊடகங்கள் முன்னுக்குப் பின் முரணான செய்தியை வெளியிட்டு வருகின்றன.
புதிய தலைமுறை, பாலிமர் ஊடகங்கள், இந்த ஸ்டிக்கர் ஒட்டியது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் என்று கூறி செய்தி வெளியிடும் சூழலில், இதர ஊடகங்கள், இதனை செய்தது தபெதிக.,வினர் என்று கூறுகின்றனர்.
அதேசமயம், நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்ட செய்தியில், ‘’இந்த பெயர் மாற்றம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும், நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கூறவில்லை. இதற்கிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி, சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில் கூட, இந்த ஸ்டிக்கர் ஒட்டியது, தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, திமுக.,வின் அதிகாரப்பூர்வ ஊடகமான கலைஞர் செய்திகள் கூட, இதனைச் செய்தது, பெரியாரிய இயக்கங்கள்தான் என்று தெளிவாகக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இறுதியாக, இந்த ஸ்டிக்கர் ஒட்டியது யார் என நிலவும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிபிசி தமிழ் ஊடகம், ஆரம்பம் முதல் இறுதி வரை என்ன நடந்தது என்பதைக் குறிப்பிட்டு விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில், இரவு நேரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஸ்டிக்கரை ஒட்டிவிட்டுச் சென்றதாகவும், காலையில் அதே இடத்திற்கு வந்து அவர்கள் போராட்டம் நடத்தி, கைதானதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்று கூட சரியான முறையில் ஆய்வு செய்யாமல், தமிழ் ஊடகங்கள் பிரேக்கிங் ஆசையில், தவறான செய்தியை வெளியிட்டு, வாசகர்களை குழப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பெரியார் ஈ.வெ.ரா. சாலை ஸ்டிக்கர்- யார் செய்தது என்ற குழப்பத்தில் தமிழ் ஊடகங்கள்!
Fact Check By: Pankaj IyerResult: Misleading
