
ஈரான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க இஸ்ரேலியர்கள் கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு தப்பிச் செல்கின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆயிரக் கணக்கான மக்கள் சாலையில் நடந்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Happy Trip” என்று இஸ்ரேல் கொடியுடன் எழுதப்பட்டுள்ளது. அதனுடன் அன்று நாமும் அழுதோமே வலிக்கிறது என்றும் எழுதப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “நேற்று அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு.வலி கொடுத்த உங்களுக்கும் அதே வலி இன்று சொந்தமாகிறது அதுவும் எங்களுக்கு வலிக்கிறது நாம் பட்ட துன்பம் இன்னொருவன் படக்கூடாது இதுதான் தார்மீகம் ஆனால் வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தானே ஆகவேண்டும் அழுதழுது கண்ணீர் வற்றி நெஞ்சு கல்லாகி விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மற்றொரு பதிவில் கூடுதலாக பாலத்தில் நடந்து செல்லும் காட்சியையும் சேர்த்துப் பதிவிட்டிருந்தனர். நிலைத் தகவலில், “எங்கள் மக்கள் முள்ளிவாய்க்காலில் நடந்ததை மறக்கமாட்டார்கள் இப்போது காசாவில் மக்கள் பட்டினியால் துடித்தார்கள் அடுத்து இஸ்ரேல் நடக்கிறது வினை விதைத்தவன் வினையை அனுபவிப்பார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோக்களை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேல் – ஈரான் போர் இரண்டாவது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் இஸ்ரேலுக்கு பதிலடி அளித்து வருகிறது. இந்த நிலையில் ஈரானின் தாக்குதலிலிருந்து தப்பிக்க இஸ்ரேலியர்கள் நடந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்த்து வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை ஜூன் 8ம் தேதியே பலரும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதாவது, இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியதற்கு கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு முன்பாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. ஜூன் 12-13ம் தேதிதான் தாக்குதலே தொடங்கியது. அதற்கு முன்பாக ஜூன் 8ம் தேதியே இந்த வீடியோ வெளியாகி இருப்பதன் மூலம் இதற்கும் இஸ்ரேல் – ஈரான் போருக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
ஜூன் 8ம் தேதி எக்ஸ் தளத்தில் வெளியான பதிவை பார்த்தோம். அதில் மக்கள் ஏன் கூட்டமாக செல்கிறார்கள் என்பது பற்றி எதையும் குறிப்பிடவில்லை. வாழ்த்து போல பதிவிட்டிருந்தனர். ஜூன் 10ம் தேதி வெளியான இன்ஸ்டாகிராம் பதிவில், “50 ஆயிரம் மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு சிலுவையை பின் தொடர்கின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தொடர்ந்த தேடிய போது ரஷ்யாவில் கிரோவ் என்ற நகரில் உள்ள கிறிஸ்தவ புனிதர் நிகோலஸ் நினைவுச் சின்னத்தை நோக்கி மக்கள் புனித பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த ஆண்டு 40 முதல் 50 ஆயிரம் மக்கள் இந்த புனித பயணத்தில் பங்கேற்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புனித பயணத்திற்கு வெலிகோரெட்ஸ்கி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
தொடர்ந்து தேடிய போது ஜூன் 6ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இரண்டு வீடியோக்களையும் வைத்து ஒருவர் வெளியிட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்து. ரஷ்ய மொழியிலிருந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதிலும், வெலிகோரெட்ஸ்கி ஊர்வலத்தில் 22 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்திலும் கிறிஸ்தவ புனித யாத்திரை என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கூறியிருப்பது போன்று இது தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலியர்கள் வெளியேறிய காட்சி இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
ரஷ்யாவில் கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொண்ட வீடியோவை இஸ்ரேலில் ஈரான் தாக்குதலுக்கு பயந்து மக்கள் வெளியேறி வருகின்றனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:தப்பி ஓடும் இஸ்ரேலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
