
கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மும்பையில் ரசிகர்கள் அளித்த சிறப்பான வரவேற்பு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “கவுண்டம்பாளையம் வெளியாக உள்ள திரையரங்கு முன்பு ரசிகர்கள் கூட்டம்.. ரெண்டு வாரத்துக்கு புக்கிங் க்ளோஸ்… Don’t underestimate the power of kongu people” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் மும்பையில் பேரணியாக சென்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பைக் கொடுத்தனர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அந்த புகைப்படத்தை எடுத்து கவுண்டம்பாளையம் வெளியாக உள்ள திரையரங்கின் முன்பு கூடிய ரசிகர்கள் என்று குறிப்பிட்டுப் பதிவிடப்பட்டுள்ளது. கமெண்ட் பகுதியில் பலரும் இது மும்பை என்று பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் இதையும் ஏராளமானவர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த பதிவு அறியாமல் போடப்பட்டதா, நையாண்டிக்காகப் போடப்பட்டதா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த புகைப்படம் மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்பதை உறுதி செய்ய மட்டும் ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஐஸ்லாந்து கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் 2024 ஜூலை 5ம் தேதி பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், “இது இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி விழா. இதில் நம்முடைய நாட்டின் மக்கள் தொகையைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமான மக்கள் இருப்பதை நீங்கள் காணலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive
மேலும், இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் இந்த புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த புகைப்படம் மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த வரவேற்பின் போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் திரைப்படத்தைப் பார்க்க திரையங்கு முன்பு கூடிய ரசிகர்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
மும்பையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பின் புகைப்படத்தை கவுண்டம்பாளையம் திரைப்படத்துக்கு கூடிய கூட்டம் என்று தவறாகப் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள்’ என்று பரவும் மும்பை புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: Satire
