ராகுல் காந்தியை விரட்டி அடித்த மணிப்பூர் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’மணிப்பூருக்கு வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் திரும்பிப் போ என்று விரட்டினர்,’’ என ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராகுல் காந்திக்கு எதிராக மக்கள் போராடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மணிப்பூருக்கு சென்ற ராகுல் காந்தியை மணிப்பூர் வராதே வெளியே போ , கோ பேக் ராகுல் என்று பதாகைகளை ஏந்தி  விரட்டி அடித்த மணிப்பூர் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி சமீபத்தில் மணிப்பூர் சென்றார். அங்கு அவரை மக்கள் வரவேற்று தங்கள் பிரச்னைகள் குறித்துப் பேசியதாக செய்திகள், வீடியோக்கள் வெளியானது. இந்த நிலையில் மணிப்பூர் மக்கள் ராகுல் காந்தியை விரட்டியடித்தனர் என்று வீடியோ சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் இணையதளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் மற்றும் ஏஎன்ஐ செய்தி ஊடகம் வெளியிட்ட வீடியோ ட்வீட்டுடன் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தியில், நீதிக்கான இந்தியாவை ஒன்றிணைத்தல் பயணத்தின் போது அஸ்ஸாம் மாநிலத்திற்குள் ராகுல் காந்தி நுழைந்த போது நகோன் மாவட்டத்தில் ராகுல் கர்தி பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி ஊடகம் 2024 ஜனவரி 21ம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதும் தெரிந்தது. இவை எல்லாம் 2024 ஜூலையில் ராகுல் காந்தி மணிப்பூர் சென்ற போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.

Archive

2024 ஜனவரி மாதம் ராகுல் காந்தி நடத்திய நியாய யாத்திரையின் போது அஸ்ஸாமில் எதிர்ப்பு கிளம்பிய வீடியோவை எடுத்து, மணிப்பூர் மக்கள் ராகுல் காந்தியை விரட்டி அடித்தனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. 

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மணிப்பூர் வந்த ராகுல் காந்தியை மக்கள் விரட்டி அடித்தனர் என்று சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ கடந்த 2024 ஜனவரியில் அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராகுல் காந்தியை விரட்டி அடித்த மணிப்பூர் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply