
நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகியதாக ஒரு நியூஸ் கார்டை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு. வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் சீமான் துரோகம் செய்து வருவதாக அவர் அறிக்கை” என்று இருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாம் தமிழர் கட்சியில் அவதூறாகப் பேசியதாக பல்வேறு வழக்குகளை சந்தித்தவர் சாட்டை துரைமுருகன். இவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, அந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர். ஆனால் இதில் மாநில ஒருங்கிணைப்பார் என்று உள்ளது. சமீபத்தில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அது தொடர்பாக சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது சற்று உற்றுப் பார்க்கும் போது தெரிகிறது. இது எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்துகொள்வதற்காக ஆய்வை தொடர்ந்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முதலில் இப்படி நியூஸ் கார்டு ஒன்றை சன் நியூஸ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது ஜனவரி 31, 2025 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று வேறு ஒரு நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு” என்று இருந்தது.
இதில் “ஜெகதீச பாண்டிய” என்பதை அகற்றிவிட்டு, “சாட்டை துரைமுருக”வை மட்டும் சேர்த்து எடிட் செய்திருப்பது தெளிவானது. இருப்பினும் இதை உறுதி செய்துகொள்ள சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
முடிவு:
நாதக-வில் இருந்து விலகுவதாக “சாட்டை துரைமுருகன்” அறிக்கை என்று சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகல் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
