விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து திருடும் காவலர் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

விமான நிலையத்தில் பயணியின் பர்ஸில் இருந்து பணம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடும் காவலர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I X Post I Archive 2

வெளிநாட்டில் விமானநிலையத்தில் பயணி ஒருவர் பரிசோதிக்கப்படும் போது அவருடைய பர்ஸில் இருந்த பணத்தை காவலர் ஒருவர் திருடுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டில் டீசன்டாக நிற்கும் செக்யூரிட்டிகள் பயணிகளின் உடைமையைத் திருடுகிறார்கள் என்று வீடியோவுக்கு ஒருவர் வருணனை செய்கிறார்.  நிலைத் தகவலில், “ஏர்போர்ட்டில் தொடரும் அக்கிரமம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வெளிநாட்டில் விமான நிலையத்தில் பயணியின் பர்ஸில் இருந்து பணத்தைத் திருடுவது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை. எங்கு நடந்தது என்பதையும் குறிப்பிடவில்லை. பார்க்கும் போதே ஸ்கிரிப்டட் வீடியோ போல உள்ளது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் உள்ளிட்ட புகைப்படங்களின் விவரத்தை தேடும் இணையதளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. பலரும் இந்த வீடியோ உண்மையில்லை என்று கமெண்ட் செய்திருந்தனர். ஆனால் அது பற்றி வேறு எந்த தகவலையும் அளிக்கவில்லை.

எனவே, வேறு வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் இந்த வீடியோ காட்சி புகைப்படங்களை பதிவேற்றித் தேடினோம். அப்போது paulvutv என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோ நவம்பர் 2, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்தது. முழு வீடியோவையும் பார்க்கும் போது திரைக்கதை அமைக்கப்பட்ட நாடக வீடியோ இது என்பது தெரிந்தது. ஆனால் இது திரைக்கதை செய்யப்பட்ட நாடகம் என்று எந்த குறிப்பையும் அந்த வீடியோவில் பதிவிடவில்லை. 

இந்த யூடியூப் சேனலில் வெளியான மற்ற வீடியோக்களை பார்த்தோம். அவை எல்லாம் ஸ்கிரிப்டட் வீடியோக்கள் போல இருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்றிருந்தவர்களை வைத்தே பல வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. குறிப்பாக பயணி தோற்றத்திலிருந்த நபர் மற்றொரு வீடியோவில் விமான நிலைய அலுவலராக நடித்த வீடியோவை காண முடிந்தது. 

மேலும் இதே வீடியோவை வேறு நபர்களை வைத்து எடுத்து சமூக ஊடகங்களில் இதற்கு முன்பு கூட பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. பல வீடியோக்கள் மிகவும் குழந்தைத்தனமாக எடுக்கப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையில் நடந்த சம்பவம் இல்லை என்பதை உறுதி செய்தன.

Instagram

paulvutv என்று கூகுளில் டைப் செய்து தேடிய போது இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் (ட்விட்டர்) என பல சமூக ஊடகங்களிலும் இந்த பெயரில் பக்கம் இருப்பது தெரிந்தது. இன்ஸ்டாகிராமில், வீடியோ கிரியேட்டர் (Video creator) என்று சுய விவர குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. எகஸ் தளத்தில், மேஜிக் கலைஞர், நடிகர்  (Magician|Actor| Doing Magic For Smiles 🙂 ) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையில்லை, ஸ்கிரிப்டட் வீடியோ என்பதை உறுதி செய்தன.

முடிவு:

விமானநிலையத்தில் பயணியின் பர்ஸில் இருந்து பாதுகாப்பு காவலர் பணம் திருடியது போன்று பரவும் வீடியோ உண்மையானது இல்லை, திரைக்கதை தயாரிப்பு நாடகம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து திருடும் காவலர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian  

Result: False