
ராணுவ வீரர் ஒருவர் சாலையோரத்தில் இளநீர் விற்கும் தன் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
சாலையோரத்தில் இளநீர் விற்கும் பெண்மணியிடம் ராணுவ வீரர் ஒருவர் இளநீர் வாங்குவது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முகத்தில் மாஸ்க் அணிந்த அந்த நபர், திடீரென்று செல்யூட் அடிக்க அந்த பெண் அதிர்கிறார். சிறிது நேரத்தில் அவர் இளநீரை கீழே வைத்துவிட்டு அந்த ராணுவ வீரரை கட்டிப்பிடிக்கிறார்.
நிலைத் தகவலில், “ராணுவத்தில் பணியாற்றும் மகன் ரோட்டோரத்தில் இளநீர் விற்கும் தாயை சொல்லாமல் பார்க்க வந்து வந்து சல்யூட் அடித்து நிற்க்கும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சாலையோரத்தில் இளநீர் விற்கும் தன் தாய்க்கு ராணுவ வீரர் இன்ப அதிர்ச்சி கொடுப்பது போன்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பார்க்கும் போது இந்த வீடியோ உண்மையான சம்பவம் போல் இல்லை. ஸ்கிரிப்டட் வீடியோ போல் உள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற வீடியோக்களை ஆய்வு செய்த போது அவை ஸ்கிரிப்டட் வீடியோ என்பது தெரியவந்தது. எனவே, இதுவும் ஸ்கிரிப்டட் வீடியோவாக இருக்கலாம் என்பதால் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
ஃபேஸ்புக்கில், “ராணுவத்தில் பணியாற்றும் மகன் ரோட்டோரத்தில் இளநீர் விற்கும் தாய்” என்று டைப் செய்து தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. ஆனால் அந்த வீடியோக்கள் எல்லாம் 3.37 நிமிடங்கள் கொண்டதாக இருந்தது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ வெறும் 1.30 நிமிடங்கள் கொண்டதாக இருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
3.37 நிமிடங்கள் கொண்ட முழுமையான வீடியோவின் கடைசியில் “இது உண்மை சம்பவம் இல்லை, பொழுதுபோக்காக எடுக்கப்பட்ட நாடகம்” என்று ஆங்கிலத்தில் எச்சரிக்கை வாசகம் (Disclaimer) இடம் பெற்றிருந்தது. பார்ப்பவர்கள் உண்மையான வீடியோ என்று கருத வேண்டும் என்று அந்த எச்சரிக்கை வாசகத்தை அகற்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஸ்கிரிப்டட் வீடியோ என்பது தெளிவானாலும், அதை உறுதி செய்துகொள்வதற்காக ஸ்கிரிப்டட் வீடியோவை வெளியிட்ட சேனலின் பக்கத்தைத் தேடி எடுத்தோம். 3RD EYE என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோ 2024 நவம்பர் 15ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் தெளிவாக இது நடிகர்களின் நடிப்பால் தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்டட் நாடகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது தெளிவாகிறது.
ஃபேஸ்புக்கில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகளில், இது உண்மையில் நடந்த சம்பவம் என்பது போல பலரும் பதிவிட்டுள்ளனர். மேலும், “இதுதான் தேசப்பற்று, தாய் பற்று” என்றெல்லாம் குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோ உண்மையில் நடந்தது என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வீடியோக்களில் கடைசியில் எச்சரிக்கை வாசகம் (Disclaimer) இடம் பெற்றிருந்தாலும், பலரும் அதை பார்த்தது போல் தெரியவில்லை. மேலும் ஆங்கிலத்தில் உள்ளதால் அதை பலரும் படிக்கவில்லை என்பதையே அவர்கள் வெளியிட்ட பதிவு மற்றும் கமெண்ட்கள் காட்டுகின்றன. பதிவை வெளியிடுபவர்கள் இது உண்மையான சம்பவம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
முடிவு:
இளநீர் விற்கும் தாய்க்கு முன் திடீரென்று வந்து இன்ப அதிர்ச்சி தந்த இந்திய ராணுவ வீரர் என்று விழிப்புணர்வு நோக்கில் எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோவை உண்மை என்று கருதி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:இளநீர் விற்கும் தாய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்த ராணுவ வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: Misleading
