‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என்னுடைய காலில் விழுந்தார்,’ என்று சீமான் கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

விகடன் ஊடகத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியின் சிறு பகுதி ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "ஈழத்தில் வந்து நானும் எங்கள் தலைவரும் பேசிக்கொண்டிருந்த போது எல்லாம் குறித்து பேசினோம். அரசியல்ல மகஇக-வின் நிலைப்பாடு வரையில் பேசினோம். எல்லாத்தையும் பேசினோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, சின்ன சின்ன இயக்கங்கள், அதே மாதிரி திரைத்துறை பற்றியும் பேசினோம். திரைத்துறைல சேரன், அமீர், பாலா எல்லார் குறித்தும் பேசினோம். தங்கர் பச்சான், தம்பி கவுதமன் எல்லார் குறித்தும். அதில அண்ணன் சத்யராஜ் எல்லார் பற்றியும் பேசினோம்.

பேசிட்டே இருக்கும்போது அவர், 'என்ன தமிழ் திரைப்பட உலகம் திரைப்படத்த பார்த்தா நமக்கு என்ன மிச்சம் இருக்கு... நமக்குன்னு அடையாளம் மிச்சம் என்ன இருக்கு. ஆங்... நடிகர் திலகம் இருக்காங்க... அப்புறம் இப்போ விட்டா நேரா வந்தா நம்ம வடிவேலு. வேறு யாரு நமக்குன்னு அடையாளமா ஒன்னும் தெரியலையே அப்படிங்கும்போது, அதை வந்து நான் அவர்கிட்ட சொன்னேன். அவரு தெய்வமேன்னு... அப்படின்னு ஏய் ஏன் கால்ல இல்ல... இல்லை அங்க விழ முடியலைல்ல அதான்" என்று பேசியதுடன் முடிகிறது.

நிலைத் தகவலில், "பிரபாகரன் தெய்வமேன்னு என் கால்ல விழ வந்துட்டார். 😂😂புஹாஹாஹாஹா😂😂" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ மற்றும் தகவலை பலரும் தங்கள் ஃபேஸ்புக், எக்ஸ் தள சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி சீமான் அளித்த பேட்டி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் பிரபாகரன் தெய்வமே என்று என் காலில் விழ வந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வீடியோவில் பிரபாகரன் என் காலில் விழ வந்தார் என்று சீமான் கூறுவது போல இல்லை.

தமிழ் சினிமாவின் அடையாளமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு வடிவேலு இருப்பதாக பிரபாகரன் சொன்ன விஷயத்தை இவரிடம் கூறினேன். இவர் காலில் விழ வந்துவிட்டார். ஏன் என் காலில் விழுகின்றீர்கள் என்று கேட்டபோது, அங்கு விழ முடியாது இல்ல என்று அவர் கூறியதாக சீமான் குறிப்பிடுகிறார்.

இந்த இடத்தில் அவர் என்று சீமான் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை மறைமுகமாக யூகிக்க முடிகிறது. பிரபாகரன் கூறிய விஷயத்தை வடிவேலுவிடம் கூறியது போன்ற தோற்றத்தையே சீமானின் பேட்டி அளிக்கிறது. மேலும், வடிவேலுதான் காலில் விழ வந்த நபர் என்பது போன்றும் அர்த்தம் வருகிறது. பிரபாகரன் தன் காலில் விழுந்தார் என்பது போன்ற அர்த்தம் வரவில்லை. உண்மையில் முழு வீடியோவையும் பார்த்தால் குழப்பம் தீரலாம் என்ற அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

விகடன் வெளியிட்டிருந்த வீடியோவை தேடி எடுத்தோம். 2020ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி இந்த வீடியோவை விகடன் வெளியிட்டிருந்தது. வீடியோவை பார்த்தோம். வீடியோவின் 9வது நிமிடத்தில் நடிகர் வடிவேலு தொடர்பாக நெறியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு சீமான் அளித்த பதிலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது.

நடிகர் வடிவேலு தொடர்பான கேள்விக்கு வீடியோவின் 9.27வது நிமிடத்தில் சீமான் பதில் அளிக்க ஆரம்பிக்கிறார். அப்போது, "அவன் உருவாக்கப்பட்ட கலைஞன் இல்ல. ஒரு சிலர் பிறவியிலேயே திறன் இருக்கிறது இல்லைனு சொல்லுவாங்க. ஆனாலும் இவரைப் பொறுத்த வரையில் நம்பித்தான் ஆகனும். ஒரு அசாத்திய கலைஞன்.

ஈழத்தில் வந்து நானும் எங்கள் தலைவரும் பேசிக்கொண்டிருந்த போது எல்லாம் குறித்து பேசினோம். அரசியலில் மகஇக-வின் நிலைப்பாடு வரையில் பேசினோம். எல்லாத்தையும் பேசினோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, சின்ன சின்ன இயக்கங்கள், அதே மாதிரி திரைத்துறை பற்றியும் பேசினோம். திரைத்துறைல சேரன், அமீர், பாலா எல்லார் குறித்தும் பேசினோம். தங்கர் பச்சான், தம்பி கவுதமன் எல்லார் குறித்தும். அதில அண்ணன் சத்யராஜ் எல்லார் பற்றியும் பேசினோம். பேசிட்டே இருக்கும்போது அவர், 'தமிழ் திரைப்பட உலகம் திரைப்படத்த பார்த்தா நமக்கு என்ன மிச்சம் இருக்கு... நமக்குன்னு அடையாளம் மிச்சம் என்ன இருக்கு. ஆங்... நடிகர் திலகம் இருக்காங்க... அப்புறம் இப்போ விட்டா நேரா வந்தா நம்ம வடிவேலு. வேறு யாரும் நமக்குன்னு அடையாளமா ஒன்னும் தெரியலையே அப்படிங்கும்போது, அதை வந்து நான் அவர்கிட்ட (வடிவேலு) சொன்னேன். அவரு (வடிவேலு) தெய்வமேன்னு... அப்படின்னு ஏய் ஏன் கால்ல இல்ல... இல்லை அங்க விழ முடியலைல்ல அதான்" என்று சிரிக்கிறார்.

இதன் மூலம் வடிவேலு பற்றித்தான் சீமான் பேசுகிறார் என்பது தெளிவாகிறது. நடிகர் வடிவேலு பற்றி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கூறிய விஷயத்தை வடிவேலுவிடம் சீமான் கூறியதாகவே அர்த்தம் வருகிறது. அப்போது வடிவேலுதான் சீமானின் காலில் விழ முயன்றிருப்பதாகப் பேட்டி அர்த்தம் தருகிறது. மேலும், அங்கு விழ முடியலைல்ல என்று நடிகர் வடிவேலு கூறுவது போன்ற அர்த்தம் வருகிறது. வீடியோவில் எந்த இடத்திலும் பிரபாகரன் என்னுடைய காலில் விழுந்தார் என்றோ, விழ முயற்சி செய்தார் என்றோ சீமான் கூறவில்லை.

வீடியோ உண்மைதான். வீடியோவில் எங்கும் பிரபாகரன் காலில் விழ வந்தார் என்று சீமான் கூறவில்லை. நடிகர் வடிவேலுவைப் பற்றி சீமான் கூறிய விஷயத்தை திரித்து, தவறான அர்த்தம் வரும் வகையில் சமூக ஊடகங்களில் விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நடிகர் வடிவேலு என் காலில் விழ வந்தார் என்று சீமான் கூறியதை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என் காலில் விழ வந்தார் என்று சீமான் கூறியதாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘பிரபாகரன் என் காலில் விழுந்தார்’ என்று சீமான் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False