கர்நாடகா மாநிலத்தில் கடல்கன்னி நடமாட்டம் என்று பரவும் வீடியோவால் பரபரப்பு…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா பகுதியில் ஓடும் ஆற்றில் கடல்கன்னி நடமாட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இந்த வீடியோவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி ‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா, மைசூர் பகுதியில் கடல்கன்னி ஆற்றில் நடமாடுகிறது,’’ என்று ஒரு தகவல் பரவுகிறது என்றும், இது  உண்மையா என்றும் சந்தேகம் கேட்டிருந்தார். 

உண்மை அறிவோம்: 

குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என கூகுளில் தேடியபோது, அப்படி எந்த செய்தியும் ஊடகங்களில் காணக் கிடைக்கவில்லை. அடுத்தப்படியாக, கடல்கன்னி என்று கூறப்படும் உயிரினம் உண்மையில் உள்ளதா, இல்லையா என்றே இன்னமும் இறுதி செய்யப்படாத சூழலில், கடலில்தான் அது இருக்கும் என்று நம்பப்படும் நிலையில், ஆற்றில் கடல்கன்னி எப்படி இருக்கும் என்றும் கூட நமக்கு சந்தேகம் எழுந்தது. 

அதேசமயம், குறிப்பட்ட வீடியோவில் ஒரு ஃப்ரேமை பிரித்தெடுத்து, அதனை கூகுளில் பதிவேற்றி நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த வீடியோ உண்மையானது இல்லை என்றும், இது ஒரு கிராஃபிக்ஸ் வீடியோ என்றும் தெரியவந்தது. கிராஃபிக்ஸ் வீடியோ தயாரிக்கும் JJPD Producciones என்ற நிறுவனம் இந்த வீடியோவை தயாரித்து, யூடியுப்பில் வெளியிட்டிருப்பதைக் கண்டோம். அதில் சில நொடிகளை வெட்டி எடுத்தே மேற்கண்ட வகையில் பலரும் வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று உறுதி செய்யப்படுகிறது. 

குறிப்பிட்ட வீடியோவின் முழு ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தவிர, அந்த வீடியோவின் கீழேயே, இதனை யாரும் நம்ப வேண்டாம், கிராபிக்ஸ் வீடியோ என்று தெளிவாகக் குறிப்பிட்டும் உள்ளனர்.

எனவே, வணிக நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு கிராஃபிக்ஸ் வீடியோவின் சில காட்சிகளை மட்டும் எடுத்து, கர்நாடகாவில் கடல்கன்னி நடமாட்டம் என்று வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கர்நாடகா மாநிலத்தில் கடல்கன்னி நடமாட்டம் என்று பரவும் வீடியோவால் பரபரப்பு…

Fact Check By: Fact Crescendo Team 

Result: False