
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணிக்கு எதிராக மேற்கு வங்கத்தில் வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா சட்டவிரோத குடியேறிகள் போராட்டம் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் கையில் கட்டை, துடைப்பத்துடன் பேரணியாக செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேற்கு வங்கத்தில் SIR எனும் வாக்காளர் தீவிர திருத்த பணி வேண்டாம் என கிளம்பும் சட்ட விரோதமாக மேற்குவங்கத்தில் குடியிருக்கும் வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்..!!
தீவிர திருத்த பணி மேற்கொண்டால் சட்ட விரோதமாக தங்கிய இவர்களின் ஓட்டு உரிமை பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காங்கிரஸ், மம்தா,திமுக ஆட்சியாளர்களால் இந்தியாவில் இப்போது எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கானுங்க என்று தமிழக மக்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..
உங்கள் வரி பணம் எல்லாம் இந்த வந்தேறிகள் அனுப்பவித்து கொண்டு இந்தியாவை நாசம் செய்ய கிளம்பிட்டாங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறி வசிக்கும் ரோஹிங்கியா, வங்கதேச இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தி வருவதாக ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி இந்த வீடியோ வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணியை இந்தியத் தேர்தல் ஆணையம் 2025 அக்டோபர் இறுதியில்தான் அறிவித்தது. ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. நமக்குக் கிடைத்த பதிவுகளில் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. இன்றைய போராட்டத்தின் காட்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வீடியோவை பதிவிட்டவரின் விவரக் குறிப்பை பார்த்த போது, அவர் வங்கதேசத்தைச் சார்ந்தவர் என்பது தெரியவந்தது. வங்கதேசத்தில் ஏற்கனவே பல போராட்டங்கள் நடந்து வருவதால், இந்த வீடியோ வங்கதேசத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று தெரிந்தது. இதை உறுதிசெய்யத் தொடர்ந்து தேடினோம்.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் சமூக ஊடகத்தில் பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால், அவற்றை நம்மால் திறந்து பார்க்க முடிவில்லை. அதே நேரத்தில், நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் இது தொடர்பாக ஃபேக்ட் செக் கட்டுரை வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.
அதில் இந்த வீடியோ வங்கதேசம் ஃபரிதாப்பூரில் எடுக்கப்பட்டது என்றும் ஷேக் அசீனாவின் அவாமி லீக் கட்சியை ஆதரிக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர். குறிப்பிட்ட அந்த நாளில் வங்கதேசத்தில் அவாமி லீக்குக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டதாக வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.
எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கு வங்கத்தில் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அக்டோபர் இறுதியில் அறிவித்தது. ஆனால், இந்த வீடியோ 2025 செப்டம்பர் 15ம் தேதி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்புக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ வெளியாகி இருப்பதன் மூலம் இது சிறப்புத் திருத்தத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பேரணி என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் 2025 செப்டம்பரில் நடந்த பேரணி ஒன்றின் வீடியோவை எடுத்து மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:மேற்கு வங்கத்தில் SIR வேண்டாம் என்று வங்கதேச குடியேறிகள் போராட்டம் செய்தனரா?
Fact Check By: Chendur PandianResult: False


