திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழுமலையான் கோவிலில் படிக்கட்டுகளைக் கழுவி தீட்டு கழிப்பு சடங்கு செய்த பவன் கல்யாண் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கோவில் படிகளை ஆந்திரப் பிரதேசம் துணை முதல்வர் பவன் கல்யாண் சுத்தம் செய்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தீட்டை கழிக்க தீவிர விரதம் இருந்து ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சடங்கு செய்த திரு. பவன் கல்யாண்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருப்பதியில் தயாரிக்கப்பட்ட லட்டில் மாட்டு கொழுப்பு கலந்திருந்ததாக ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கோவிலை, லட்டை புனிதப்படுத்தும் சடங்குகள் செய்யப்பட்டன. ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதியில் சுத்தப்படுத்தும் விரதத்தை தொடங்காமல், விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவில் என்ற வேறு ஒரு கோவிலில் பிராயச்சித்த தீக்‌ஷா என்ற விரதம் தொடங்கினார்.

இந்த நிலையில் தீட்டைக் கழிக்க ஏழுமலையான் கோவிலில் படிகளை சுத்தம் செய்த பவன் கல்யாண் என்று பலரும் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் பவன் கல்யாண் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தீட்டு கழித்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. இனி அவர் செல்லலாம், செல்லாமலும் இருக்கலாம். ஆனால், இந்த வீடியோ ஏழுமலையான் கோவிலில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் பவன் கல்யாண் பரிகார பூஜை செய்த செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. அவற்றில் இந்த பூஜையை பவன் கல்யாண் விஜயவாடாவில் உள்ள கோவிலில் செய்தார் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.


விஜயவாடா கனகதுர்கா கோவில் என்பது திருப்பதி பெருமாள் கோவிலுக்கு உரியதா அல்லது அங்கு திருப்பதி பெருமாளுக்கு பூஜை செய்யப்படுகிறதா என்று அறிய அந்த கோவில் பற்றித் தேடிப் பார்த்தோம். ஆந்திர மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அது. ஆனால் அங்கு பெருமாளுக்கு உரிய வழிபாடு செய்யப்படுவதாக தகவல் இல்லை. துர்கை அம்மன் வழிபாடு அங்கு சிறப்பாக நடப்பதாக கோவிலின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் கனகதுர்கா கோவிலை ஏழுமலையான் கோவில் என்று குறிப்பிட முடியாது என்பது தெளிவாகிறது.


நம்முடைய ஆய்வில் பவன் கல்யாண் பரிகார பூஜையை விஜயவாடா கனகதுர்கா கோவிலில் செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகட்டுகளை சுத்தம் செய்து தீட்டு கழித்த பவன் கல்யாண் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

பவன் கல்யாண் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் பூஜை மேற்கொண்ட வீடியோவை ஏழுமலையான் கோவிலில் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Claim Review :   திருப்பதி ஏழுமலையான் கோவிலில் படிக்கட்டுகளைக் கழுவி தீட்டு கழிப்பு சடங்கு செய்த பவன் கல்யாண் என்று ஒரு வீடியோ உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  PARTLY FALSE