டெல்லி மதுபான முறைகேட்டில் சிக்கியதால் ‘மோடி என் நண்பர்’ என்று சந்திரசேகர ராவ் கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லி மதுபான ஏலம் ஊழல் வழக்கில் சிக்கியதால் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடி தன்னுடைய சிறந்த நண்பர் என்று கூறினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். அவர் என்னுடைய சிறந்த நண்பர் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமர் மோதியுடன் ஆரம்பக் காலங்களில்  எதிர்த்து , மலையில் மோதுவதை போல் மோதி  மண்டை உடைந்து ரத்தம் வழிந்தவர்கள்  கடைசியில் மகுடிக்கு அடங்கிய நாகம் போல் அடங்கியவர்களின் வரிசையில் சந்திர பாபு நாயுடு, ம்ம்தா என்றிருந்து இப்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் அடங்குவார். 

பிரதமர் மோதியை சகட்டுமேனிக்கு அவதூறாக பேசி புழுதியை வாரி இறைப்பதில் சந்திரபாபு நாயுடுவையும் மிஞ்சி விடுவார். அப்படிப்பட்டவர் இன்று சரணாகதியடைந்து , ‘மோதிக்கும் எனக்கும் எந்தவித மனகசப்புமில்லை, அவர் எனக்கு நெருங்கிய உற்ற நண்பர், மோதி ஒரு சிறந்த மனிதர்  என ஏன் புகழாரம் சூட்டுகிறார்..! இதுதான் விஷயம். அவர் பெண் கவிதா தலை நகர் தில்லி அரசிற்கு மது பான விற்பனை ஏல சம்பந்தமான விஷயத்தில் தில்லி துணை முதல்வர் சிசோதியாவுக்கு மது பான உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ. 100 கோடி வாங்கி லஞ்சம் கொடுத்த வழக்கில் அமலாக்கத்துறை, மற்றும் CBI யிடம் வசமாக சிக்கிக்கொண்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை மோடி ராஜ்யம் Modi Rajyam என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Santhanakrishnan Renga Ramanujam என்ற ஃபேஸ்புக் ஐடியைக் கொண்டவர் 2022 டிசம்பர் 29ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாரதிய ஜனதா கட்சி, பிரதமர் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். டெல்லி மதுபான ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரின் மகன் என்பதால், தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றச்சாட்டு உள்ளது. 

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதனால் பயந்துபோன சந்திரசேகர் ராவ் பாஜக-விடம் சரணாகதி அடைந்து மோடிக்கும் எனக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை, அவர் என் நண்பர் என்று  பேட்டி அளித்தார் என்று பா.ஜ.க-வினர் சமூக ஊடகங்களில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

சந்திரசேகர் ராவ் இவ்வாறு கூறியிருந்தால் அது செய்தி ஊடகங்களில் மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். சமீபத்தில் அப்படி எந்த ஒரு செய்தியும் வரவில்லை. எனவே, இந்த வீடியோ பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive 1 I indianexpress.com I Archive 2 

எனவே, மோடி என் நண்பர் என்று சந்திரசேகர் ராவ் கூறினார் என்று கூகுளில் ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் சந்திரசேகர் ராவ் இப்படி பேட்டி அளித்தார் என பல செய்திகள் நமக்கு கிடைத்தன. அதன் வீடியோ கிடைக்குமா என்று யூடியூபில் தேடினோம்.அப்போது மார்ச் 4, 2018ல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ கிடைத்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் அதுவும் ஒன்று என்று தெரிந்தது. 

டெல்லி மது முறைகேடு 2022ம் ஆண்டு நிகழ்ந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு வீடியோ 2018ம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, டெல்லி மதுபான முறைகேடு வழக்கு காரணமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மோடி தன்னுடைய நண்பர் என்று சரணாகதி அடைந்து பேட்டி அளித்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வழக்கு விசாரணையை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் மோடி தன்னுடைய நண்பர் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறினார் என்று பரவும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:டெல்லி மதுபான முறைகேட்டில் சிக்கியதால் ‘மோடி என் நண்பர்’ என்று சந்திரசேகர ராவ் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False