
ஒளிப்பதிவு திருத்த மசோதாவைத் திரும்பப் பெறாவிட்டால் பல இயக்குநர்கள், நடிகர்கள் திரைத்துறையை விட்டு விலகுவோம் என்று இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று இயக்குநர் சீனு ராமசாமி புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு தடை செய்யாவிட்டால் திரைத்துறையை விட்டே விலகுவேன்; என்னைப் போல் பல இயக்குனர்களும், நடிகர்களும் திரைத்துறையை விட்டு விலகுவர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை வேலாயுதம் யாதவ் என்பவர் 2021 ஜூலை 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்சார் செய்யப்பட்டு தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வகை செய்யும் வகையில் ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு தமிழக திரைத்துறை பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா இந்த திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அது தொடர்பாக வெளியான நியூஸ் கார்டில் திரையுலகை விட்டு வெளியேறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்ததாக எடிட் செய்து சில விஷமிகள் வதந்தி பரப்பினர்.
இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி பெயரிலும் அதே போன்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஒன்று இரண்டு என்று இல்லாமல் ஏராளமானவர்கள் இந்த போலியான நியூஸ் கார்டை பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டை தேடினோம். ஜூலை 2, 2021 அன்று சீனு ராமசாமி ட்வீட் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “தணிக்கை செய்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை அரசியல் காரணங்களைக் கூறி மறுதணிக்கை செய்கிறோம் என்று அத்திரைப்படத்தையே முடக்கும் அபாயம் இருக்கிறது. ஆகவே ஒளிப்பதிவு மசோதாவில் ‘மறுதணிக்கை’ எனும் ஷரத்தை நீக்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சீனு ராமசாமி உண்மையில் தன்னுடைய ட்வீட்டில் என்ன சொல்லியுள்ளார் என்பதை அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தோம். அப்போது, அவர் வெளியிட்ட அசல் ட்வீட் பதிவு நமக்குக் கிடைத்தது. அதில் திரைத்துறையை விட்டே விலகுவேன் என்று அவர் கூறவில்லை.
அதே போல், போலியான நியூஸ் கார்டை பலரும் ஷேர் செய்து வருவது பற்றி ட்வீட் ஒன்றை அவர் வெளியிட்டிருப்பதும் தெரிந்தது. அதில், “இது போல ஒரு டிவீட்டை நான் பதிவிடவே இல்லை.இந்த பொய்யான டிவீட்டை பதிவிட மெனக்கெட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் கலைஞன் அரசியல்வாதியில்லை ஆகவே இது போல செய்வதால் பயனில்லை” என்று கூறியிருந்தார்.
இதன் மூலம் திரையுலகை விட்டு விலகுவேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது போலியானது என்பது உறுதியாகிறது.

முடிவு:
சீனு ராமசாமி திரைஉலகை விட்டு வெளியேறப் போவதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:திரைத்துறையை விட்டு விலகுவோம் என இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்தாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
