வங்கதேசத்தில் தன்னை தாக்க வந்த இஸ்லாமியர்களை அரிவாளை வைத்து ஓட ஓட விரட்டிய இந்து பெண் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வீட்டுக்குள் இருந்து ஒரு ஆண் வெளியே ஓடி வருகிறார். அவரைத் தொடர்ந்து பெண் ஒருவர் கையில் அரிவாளுடன் துரத்துகிறார். இவர்களுக்கு பின்னால் இன்னும் சிலர் வெளியே வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பங்களாதேஷ்-ல் அரிவாள் எடுத்து ஓட ஓட விரட்டு பங்களாதேஷ் #இந்து வீர மங்கை தங்களை பாதுகாத்துக்கொள் இது போன்ற வீர #வேலுநாச்சியார்கள் உருவாக வாழ்த்துகள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசின் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் குதித்தனர். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அந்நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவுக்கு தப்பினார். இதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

ஆனால், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் பரவும் பெரும்பாலான பதிவுகள் வெறும் வதந்தியாகவே உள்ளது. வங்கதேசத்தில் நடந்த பழைய சம்பவங்களின் வீடியோ. புகைப்படங்களை எல்லாம் எடுத்து இப்போது நடந்தது போன்று பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தன்னை தாக்க வந்த வங்கதேச இஸ்லாமியர்களை இந்து பெண் விரட்டியடித்தார் என்று ஒரு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

வீடியோவை பார்க்கும் போது அந்த பெண் இந்து என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த வீட்டிலிருந்து வந்தவர்கள் எல்லோரையும் பார்க்கும் போது இஸ்லாமியர்களைப் போலவே உள்ளனர். நீண்ட தாடி, உயர்த்தி கட்டிய லுங்கி என எல்லாமே இவர்கள் இந்துக்கள் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் இந்த பெண்ணை இந்து பெண் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2022 மார்ச் மாதத்தில் இந்த வீடியோவை வங்க மொழியில் ஒருவர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. வங்க மொழியில் இருந்த பதிவை கூகுள் டிரான்ஸ்லேட்டர் பயன்படுத்தி மொழிபெயர்த்துப் பார்த்தோம். அதில், "திருமணம் செய்யலாம் என்று மேற்கொண்ட சிறு முயற்சி கூட இந்த வீடியோவை பார்த்த பிறகு காணாமல் போய்விட்டது" என்று குறிப்பிடப்பட்டிருப்பது தெரிந்தது.

அதாவது, கணவனை அரிவாளை வைத்து வெட்ட விரட்டிய மனைவி என்ற அர்த்தத்தில் பதிவிட்டிருந்தனர். எந்த இடத்திலும் இரு மதத்தினருக்கு இடையே மோதல் என்று இல்லை. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று அறிய தொடர்ந்து ஆய்வு செய்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை.

வங்கதேச மாணவர்கள் கிளர்ச்சி 2024 ஜூன் மாதம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் தொடக்கத்திலிருந்துதான் சிறுபான்மை இந்து மக்கள் மீது தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வீடியோ மாணவர்கள் போராட்டத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பதிவு தொடர்பாக எந்த ஒரு விவரமும் செய்தி, சமூக ஊடகங்களில் இருந்து நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வீடியோவை பார்க்கும் போது குடும்ப பிரச்னை காரணமாக அந்த பெண் துரத்து போல தெரிகிறது.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தே சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு வந்திருப்பதன் மூலம் இப்போது நடக்கும் வன்முறைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேச உள்நாட்டு பிரச்னை வெடிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து சமூக ஊடக பக்கங்களில் குடும்பத் தகராறு காரணமாக கணவனை வெட்ட விரட்டிய பெண் என்று பதிவிடப்பட்டு வந்த வீடியோவை, இந்து பெண் தன்னை பாதுகாத்துக்கொள்ள அரிவாளுடன் விரட்டிய காட்சி என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் அரிவாள் வைத்து விரட்டிய வீர இந்து பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False