FACT CHECK: பாக். நாடாளுமன்றத்தில் மோடி, மோடி என கோஷம் எழுப்பப்பட்டதா?

இந்தியா சர்வதேசம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி, மோடி என்று எம்.பி-க்கள் கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பேசும் வீடியோ தொடர்பாக இந்தி தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட பதிவு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாக் பார்லிமென்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசும் போது பலுசிஸ்தான் எம்பிக்கள்  மோடி மோடி என கோஷம்! இங்கிருக்கும் இம்ரான் குஞ்சுகளுக்கு இது தான் மோடி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை தோட்டா என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 அக்டோபர் 29ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முழுமையான வீடியோவாக இல்லை. எடிட் செய்து வெளியிட்டது போல உள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் பேசும் போது மோடி, மோடி என்று கோஷம் எழுப்புவது போலத் தெரிந்தது. தொடர்ந்து கவனித்த போது வோட்டிங் வோட்டிங் என்பது போல இருந்தது. எனவே, இந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி கோஷம் எழுப்பப்பட்டது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்தியா டிவி இந்த வீடியோவை வெளியிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி கோஷம் எழுப்பப்பட்டது என்று அதில் கூறுகின்றனர். எனவே, தொலைக்காட்சியின் பெயரில் தவறான தகவல் பரப்புகிறார்களோ என்ற சந்தேகம் விலகியது.

YouTube

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வோட்டிங் என்கிறார்களா, மோடி என்கிறார்களா என்று என்பதை முழு வீடியோவை பார்த்தால் மட்டுமே அறிய முடியும் என்ற நிலையில், முழு வீடியோ கிடைக்கிறதா என்று தேடினோம்.

அப்போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான நாடாளுமன்ற பேச்சு தொடர்பான வீடியோக்கள் பல கிடைத்தன. அதில், குரேஷி பேச ஆரம்பிக்கும் போது நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சி வருகிறது. இதில் வோட்டிங், வோட்டிங் (வாக்கெடுப்பு) என்று கூறுவது தெளிவாக கேட்கிறது. அதற்கு நாடாளுமன்றத் தலைவர் வோட்டிங் நடைபெறும் என்கிறார். தொடர்ந்து பேசும் குரேஷியும் வோட்டிங் என்று சொல்வதை தெளிவாகக் கேட்க முடிகிறது. 

YouTube

குரேஷி பேசுவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேறு ஏதும் வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது, அந்த விவாதத்தில் முழு தொகுப்பும் கிடைத்தது. அப்போது எதிர்க்கட்சியைச் சார்ந்தவர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானத்தைத் தாக்கல் செய்கிறார். அதற்கு குரேஷி பதில் சொல்லத் தொடங்குகிறார். அப்போதுதான் இந்த வோட்டிங் வோட்டிங் என்ற கோஷம் எழுவதைக் காண முடிந்தது. இந்த காட்சிகளை வீடியோவின் 12வது நிமிடத்தில் இருந்து காணலாம். 14.30வது நிமிடத்தில் வோட்டிங் வோட்டிங் என்று கோஷம் எழுப்புகின்றனர்.

YouTube

தொடர்ந்து பல வீடியோக்களை பார்த்தோம். எல்லாவற்றிலும் வோட்டிங் என்று கூறுவதைக் காண முடிந்தது. குரேஷியின் பேச்சு தொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் என்ன செய்தி வெளியாகி உள்ளது என்று பார்த்தோம். பாகிஸ்தானின் dawn ஊடகத்தில் அமைச்சரின் பேச்சை விரிவாக வெளியிட்டிருந்தனர். அதில், வோட்டிங் வோட்டிங் என்று கோஷம் எழுப்பப்பட்டது என்றே கூறப்பட்டிருந்தது. 

அசல் பதிவைக் காண: dawn.com I Archive

குரேஷி பேச ஆரம்பித்ததுமே வோட்டிங் என்ற கோஷம் எழுகிறது. நமக்குத்தான் இந்தி, உருது தெரியாது. இந்தி டிவி சேனல் நடத்துபவர்களுக்குக் கூடவா தெரியாமல் போய்விட்டது. நாடாளுமன்றத்தை வழிநடத்துபவர் கூட தன்னுடைய பேச்சில் வோட்டிங் நடைபெறும் என்ற வகையிலேயே சொல்கிறார். அதை முழுவதுமாக வெளியிட்டிருந்தால் கூட அது மோடி இல்லை, வோட்டிங் என்று தெரிந்திருக்கும். தொடர்ந்து அமைச்சரும் வோட்டிங் என்று கோஷம் எழுப்பப்படுவதைப் பற்றிப் பேசுகிறார். 

குரேஷி தொடர்ந்து பேசும் போது பலுஜிஸ்தான் மற்றும் எதிர்க்கட்சியினர் இந்தியாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்கிறார். அதைத் தொடர்ந்து மோடியின் நண்பர்கள் துரோகிகள் என்று கோஷம் எழுப்பப்படுகிறது.

இதன் மூலம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வோட்டிங் வோட்டிங் என்று எழுப்பப்பட்ட கோஷத்தை மோடி மோடி என்று கோஷம் எழுப்பப்பட்டதாக இந்தி ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டிருப்பதும், அதன் உண்மைத் தன்மையை அறியாமல், கோஷம் கேட்க கொஞ்சம் மோடி மோடி என்பது போல உள்ளதால் உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. 

முடிவு:

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வோட்டிங் வோட்டிங் என்று கோஷம் எழுப்பியதை மோடி மோடி என்று தவறாக புரிந்துகொண்டு பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாக். நாடாளுமன்றத்தில் மோடி, மோடி என கோஷம் எழுப்பப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply