
கர்நாடகாவில் புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள் மீது இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் தண்ணீரை வாரி இரைத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள் மீது இளைஞர்கள் சிலர் தண்ணீரை வாரி இரைக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பி இஸ்லாமிய பெண்கள் வேகமாக ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹிஜாப் அணிந்த மாணவிகள் மீது சாக்கடை தண்ணீரை வாரி இரைக்கும் அநாகரீக கர்நாடக சங்கிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Magimai Doss என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 18ம் தேதி பதிவிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
கர்நாடகாவில் புர்கா, ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருக்கும் சூழலில் ஹிஜாப் தொடர்பான பழைய வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் மீது மாணவர்கள் தண்ணீர் வாரி இரைத்தனர் என்று இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அப்படி எந்த ஒரு சம்பவமும் நடந்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில், இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள ஆடியோ எடிட் செய்யப்பட்டு வந்தே மாதரம் பாடல் சேர்க்கப்பட்டிருந்தது. வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2019ம் ஆண்டிலேயே யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பது தெரியவந்தது.
Lanka Sun News என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த வீடியோவை 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது. அதில், இலங்கை கிழக்கு பல்கலைக் கழகத்தில் இன துவேஷத்துடன் மாணவிகள் மீது ரேகிங் கொடுமை நிகழ்த்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பழைய வீடியோவைப் பார்க்கும் போது அடி, விடுடா என தமிழ் வார்த்தைகள் கேட்டன. தண்ணீரை வாரி இரைக்கும் போது பக்கெட் கீழே விழும் காட்சியின் போது, வாளி, வாளி என்று மாணவர் கூறுகிறார். கர்நாடகாவில் தமிழில் பேசி மாணவிகள் மீது தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பு குறைவு. அப்படி நடந்திருந்தால் அது தமிழ் – கன்னட மொழி பிரச்னையாக மாறியிருக்கும். எனவே, இது கர்நாடகாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.
தொடர்ந்து தேடிய போது, 2019ம் ஆண்டிலேயே இந்த வீடியோவை இந்தியாவில் சிறுபான்மையின மக்கள் தாக்கப்படும் காட்சி என்று பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் பரப்பினர். அப்போதே, இந்த தகவல் தவறானது. இந்த வீடியோ இலங்கையில் ஒரு பல்கலைக் கழகத்தில் எடுக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகி இருப்பதும் தெரிந்தது.
மேலும் இந்த வீடியோ தொடர்பாக இலங்கை ஊடகம் ஒன்று அந்த பல்கலைக் கழகத்தின் பேராசிரியரைத் தொடர்புகொண்டு விசாரித்ததாகவும், இந்த நிகழ்வு தங்கள் பல்கலைக் கழகத்தில் நடந்ததுதான் என்று அவர் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இலங்கையில் ரேகிங் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல்கலைக் கழகத்தில் பக்கெட்டிங் எனப்படும் நீர் இரைத்தல் வழக்கத்தில் உள்ளது. மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் 2019ம் ஆண்டு இலங்கையில் எடுக்கப்பட்ட வீடியோவை எடுத்து வந்து, கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்கள் மீது இந்துத்துவ மாணவர்கள் தண்ணீர் வாரி இரைத்தனர் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்கள் மீது தண்ணீரை வாரி இரைத்து இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடுமை செய்தனர் என்று பரவும் வீடியோ 2019ம் ஆண்டு இலங்கையில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இஸ்லாமிய பெண்கள் மீது தண்ணீரை வாரி இரைக்கும் வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
