
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – நடிகை ஶ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கத் தயார் என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை ஶ்ரீரெட்டி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேமரா முன்பு வந்து கேளுங்கள் ஆலோசனை தருகிறேன். உதயநிதி நடிகை ரெட்டி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் கேமரா முன்பு வந்து பேசினால் என்னுடைய ஆலோசனையை வழங்குவேன், தனிப்பட்ட முறையில் இந்த பிரச்னை குறித்து பேசுவது சரியானது அல்ல! – தூத்துக்குடியில் நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை செந்தில் @drsenthil84 என்ற எக்ஸ் (ட்விட்டர்) ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பல நடிகர்கள் பற்றி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டவர் நடிகை ஶ்ரீரெட்டி. உதயநிதி ஸ்டாலினை தொடர்புப்படுத்தி இவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. ஆனால், அதை நான் வெளியிடவில்லை என்று ஶ்ரீரெட்டி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த சூழலில் நடிகை ஶ்ரீரெட்டி – உதயநிதி ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கச் சொல்வது எல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நியூஸ் கார்டை பார்க்க அப்படியே சன் நியூஸ் வெளியிட்டது போல் இருந்தது. எனவே, இது உண்மையானது என்றே நம்மை நம்பத் தூண்டியது அந்த நியூஸ் கார்டு.
இருப்பினும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சன் நியூஸில் பதிவிட மாட்டார்களே என்ற ஐயத்தில் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். செப்டம்பர் 22, 2023 அன்று சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று ஒரு நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. ஆனால் அதில் சீமான், விஜயலட்சுமி புகைப்படம் இருந்தது. அந்த நியூஸ் கார்டில் “சீமான் – விஜயலட்சுமி” என்பதை மட்டும் அழகாக நீக்கிவிட்டு, “உதயநிதி – ரெட்டி” என்று மாற்றிவிட்டு, உதயநிதி, ஶ்ரீரெட்டி படத்தை சேர்த்து நிறைய எடிட்டிங் வேலை செய்து இந்த போலி நியூஸ் கார்டை உருவாக்கியிருப்பது தெரிந்தது.

இதை உறுதிசெய்ய, சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜை தொடர்புகொண்டு பேசினோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். மேலும் அவர் கூறுகையில், தற்போது சன் நியூஸ் பயன்படுத்துவது போன்ற அதே தமிழ் ஃபாண்டை பல போலியான நியூஸ் கார்டுகளை உருவாக்குபவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். படத்தை மாற்றி, முதல் வரியில் உள்ள பெயரை மட்டும் அழகாக மாற்றியுள்ளனர். இதனால்தான் அந்த நியூஸ் கார்டு உண்மையான நியூஸ் கார்டு போலத் தெரிகிறது” என்றார்.
நம்முடைய ஆய்வில், உதயநிதி – -ஶ்ரீரெட்டி விவகாரத்தில் ஆலோசனை வழங்கத் தயார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உதயநிதி – ஶ்ரீரெட்டி விவகாரத்தில் ஆலோசனை வழங்கத் தயார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உதயநிதி – ஶ்ரீரெட்டி விவகாரத்தில் ஆலோசனை வழங்கத் தயார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
