
மும்பையிலிருந்து நாக்பூர் வரை அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் வே என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
“மும்பை டு -நாக்பூர் எக்ஸ்பிரஸ்- வே ₹55,000 கோடியில் பிரமாண்ட சாலை” என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் மிகவும் பிரம்மாண்டமான, மேம்பாலத்தின் புகைப்படம் முகப்பு படமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மும்பை – நாக்பூர் விரைவுச் சாலைத் திட்டம் 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2018 டிசம்பரில் பிரதமர் மோடி இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மும்பை துறைமுகம் தொடங்கி நாக்பூர் விமானநிலையம் வரை 701 கி.மீ தூரத்துக்கு 6 வழிச் சாலையாக அமைகிறது. முதல் கட்டமாக நாக்பூர் முதல் ஷீரடி வரை 520 கி.மீ தூரத்துக்கு சாலை பணி முடிந்துள்ளது. இதை வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Dinamalar – World’s No 1 Tamil News Website ஃபேஸ்புக் பக்கம் 2022 டிசம்பர் 7ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மும்பை – நாக்பூர் இடையே அமைக்கப்பட்டு வரும் 6 வழி தேசிய நெடுஞ்சாலையின் முதல் கட்டப் பணி முடிந்துள்ளது. இதை வருகிற டிசம்பர் 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இந்த தேசிய நெடுஞ்சாலையின் அழகான தோற்றம் என்று பல புகைப்படங்கள் வெளியாகின.
பிரதமர் மோடி தொடங்கி, உள்ளூர் மாவட்ட நிர்வாகம் வரை பலரும் இந்த நெடுஞ்சாலையின் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் வெளியிட்ட பதிவில் இல்லாத படத்தை வைத்து ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரவே அது பற்றி ஆய்வு செய்தோம்.
தினமலர் வெளியிட்ட வீடியோவில் இருந்து புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் தோற்றம் என்று பல ஆங்கில ஊடகங்கள் இந்த படத்தை வெளியிட்டிருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: shutterstock.com I Archive
தொடர்ந்து தேடிய போது, இந்த புகைப்படத்தை shutterstock.com என்ற இணையதளம் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிந்தது. அந்த படம் பற்றிய குறிப்பில் தாய்லாந்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை Aviator Fortune என்ற தாய்லாந்தைச் சார்ந்த புகைப்பட கலைஞர் எடுத்திருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், இந்த பாலத்தின் பல்வேறு புகைப்படங்கள் அந்த தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தாய்லாந்து நாட்டின் நெடுஞ்சாலை புகைப்படத்தைத் தவறாக மும்பை – நாக்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையின் ஒரு பகுதி என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
மும்பை – நாக்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையில் உள்ள சிக்கலான மேம்பாலம் என்று பரவும் புகைப்படம் தாய்லாந்தைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
