
6 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என்று திருமாவளவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “6 தொகுதியிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்து நாய்களின் ஓட்டு தேவையில்லை பிரச்சாரத்தில் திருமாவளவன் பரபரப்பு பேச்சு” என்று இருந்தது. இந்த பதிவை Ganesh Raksow என்பவர் 2021 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டிருந்தார். ஏராளமானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேர்தல் பிரசாரத்தில் யாரும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூற மாட்டார்கள். அதிலும் மிகவும் கீழ்த்தரமாக நாய் என்று விமர்சித்து வாக்கு வேண்டாம் என்று கூறுவார்களா என்று கேள்வி எழுந்தது. ஏராளமானவர்கள் இதை ஷேர் செய்தும் வருகின்றனர். எனவே, இந்த தகவல் மற்றும் நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் கௌதம சன்னாவை தொடர்புகொண்டு இது பற்றிக் கேட்டோம். ‘’இது போலியானது, இதை ஃபேஸ்புக்கில் இருந்து அகற்ற வேண்டும்,’’ என்று நம்மிடம் கேட்டுக்கொண்டார்.
அடுத்ததாக, இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி தான் வெளியிட்டதா என்பதை அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, அதில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் மூலம் வாக்குக்காக தங்களையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து அதன் பழியை திருமாவளவன் மீது போட்டிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் இந்துக்கள் வாக்கு வேண்டாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்துக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திருமாவளவன் கூறியதாக பரவும் போலிச் செய்தி!
Fact Check By: Chendur PandianResult: False
