FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி அறிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், “திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. – நடிகர் ரஜினிகாந்த்” என்று இருந்தது. 

இந்த நியூஸ் கார்டை காவியத் தலைவன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரஜினிகாந்த் 1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார். அதன் பிறகு அ.தி.மு.க, பா.ஜ.க என்று தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி வந்துள்ளார்.

இந்த சூழலில் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ரஜினிகாந்த் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்ற வகையில் அறிவிப்பு வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டில் ஏப்ரல் 4ம் தேதி வெளியானதாக உள்ளது. தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. ரஜினிகாந்த் அப்படி ஒரு அறிவிப்பை, பேட்டியை அளித்திருந்தால் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 4, 2021 அன்று மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கும். காட்சி, அச்சு, சமூக ஊடகங்களில் அதுதான் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியிருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில் பாலிமர் தொலைக்காட்சியில் மட்டும் எப்படி வந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பாலிமர் தொலைக்காட்சியின் சமூக ஊடக பக்கங்களை ஆய்வு செய்தோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 4ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அதில் ரஜினிகாந்த் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு டிசைனை தற்போது பாலிமர் தொலைக்காட்சி பயன்படுத்துவது இல்லை என்பதும் தெரிந்தது. பழைய நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து தவறான தகவல் பரப்பியிருப்பதை உறுதி செய்ய பாலிமர் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி அருணைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது, என்று உறுதி செய்தார்.

அசல் பதிவைக் காண: twitter I Archive 1 I Facebook I Archive 2

ரஜினிகாந்த் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை ஆய்வு செய்தோம். ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் ஆக்டிவாக இல்லை. ட்விட்டர் பக்கத்தில் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கும், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அவர் பதிவிட்டிருந்தார். அதைத் தவிர வேறு பதிவுகள் எதுவும் இல்லை. இதன் மூலம் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாக பரவும் பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply