
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிரக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது என்று ஒரு விடியோ கேம் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I wbnewz.com I Archive 2
“இப்படி ஒரு அசாத்திய திறமையா – இந்த பைலட்க்கு! கடைசி வரை பாருங்க” என்று ஒரு செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமானத்தை ரோட்டில் தரையிறக்கி பல உயிர்களைக் காப்பாற்றிய அதிசயம் – வீடியோ இந்த பைலட்டின் திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும் – கடைசி வரை வீடியோ பாருங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த லிங்கை Tamil Cinema என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 பிப்ரவரி 23 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஃபேஸ்புக் லிங்கைப் பார்க்கும்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் இறங்கியதன் புகைப்படம் போலவே உள்ளது. இது உண்மை என்று நம்பி ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்துள்ளனர். இப்படி எதுவும் நடந்ததாக செய்தியே இல்லையே, இந்த புகைப்படம் எப்படி என்ற சந்தேகத்தின் பேரில் அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்தோம்.
அந்த இணையதள பக்கத்தில் எந்த ஒரு செய்தியும் இல்லை. இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்று எதையும் குறிப்பிடவில்லை. ஒரே ஒரு யூடியூப் வீடியோவை மட்டும் எம்பெட் செய்திருந்தனர். அது ஏகே கேமிங் என்ற யூடியூப் பக்கம் பதிவேற்றம் செய்திருந்த விமான வீடியோ.
வீடியோவைப் பார்த்தோம். இரண்டு விமானங்கள் அருகருகே பறந்து வருகின்றன. அப்போது ஒரு விமானத்தின் மீது ஹெலிகாப்டர் வந்து மோதுகிறது. ஆனால், அதன் சிதைவுகள் எதுவும் கீழே விழுவதாக இல்லை. இதில் நிலைகுலைந்த விமானம் தடுமாற்றத்துக்குப் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பி தரையிறங்குகிறது. எதிரே இன்னொரு விமானம் புறப்பட ரன்வேயில் வரவே, விபத்தை தவிர்க்க இந்த விமானம் மீண்டும் டேக் ஆஃப் ஆகிறது. பிறகுமலைப்பாங்கான இடத்துக்குச் சென்று மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சாலையில் தரையிரங்குவது போல உள்ளது. முழுக்க முழுக்க கிராஃபிக் வீடியோ என்பது தெரிகிறது.
இந்த வீடியோவை வெளியிட்டிருந்த AK Gaming-ன் சுய விவர குறிப்பைப் பார்த்தோம். அதில், முழுக்க முழுக்க விளையாட்டு தொடர்பான வீடியோக்கள் GTA 5 மற்றும் GTA 5 Modsல் விளையாடுவதன் மூலம் உருவாக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: youtube.com I Archive 1
வீடியோவை வெளியிட்டவர்களே இது வீடியோ கேம் விளையாட்டு பதிவு என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவை எடுத்து, உண்மையில் நடந்த சம்பவம் போலவும், மிகவும் திறமையாக பயணிகளை விமானி காப்பாற்றிவிட்டார் என்றும் செய்தி வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளித்தது.
நம்முடைய ஆய்வில், வீடியோ கேம் யூடியூப் வீடியோவை வைத்து தவறான செய்தி வெளியிட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
முடிவு:
வீடியோகேமர் உருவாக்கிய வீடியோவை எடுத்து உண்மையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விபத்துக்குள்ளானது போல செய்தி வெளியிட்டிருப்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிறக்கப்பட்டதா?– இது ஒரு வீடியோ கேம்!
Fact Check By: Chendur PandianResult: False
