FactCheck: தொப்புள்கொடி உறவின் செயல்; இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’தொப்புள்கொடி உறவின் செயல்; இந்தியர்களே பத்திரம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Twitter Claim LinkArchived Link

இந்த ட்விட்டர் பதிவை நமது வாசகர் ஒருவர் அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதில், ‘முஸ்லீம் போல உடை அணிந்த ஒருவர், மற்றொரு நபரை இரும்புக் கம்பி போன்ற ஒன்றால் கடுமையாக தாக்குகிறார்; மயங்கி விழுந்த அந்த நபரை அங்கே இருந்தவர்கள் மீட்டு, ஆட்டோவில் மருத்துவமனை அழைத்துச் செல்லும்,’ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனைப் பலரும் இந்தியாவில் நிகழ்ந்த சம்பவம் என்றும், இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள் என்றும் கூறி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் காண முடிகிறது.

ஃபேஸ்புக்கிலும் கூட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Facebook Claim LinkArchived Link

இந்த தகவல் மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளதால், உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி, பலரும் நமக்கு, இமெயில் அனுப்பியும், வாட்ஸ்ஆப் வழியாகவும் முறையீடு செய்தபடி உள்ளனர். 

உண்மை அறிவோம்:
இந்த வீடியோவை நன்கு பார்வையிட்டபோது, அது ஒரு சிசிடிவி காட்சி என்பதும், அதுபற்றி சிங்களம் மற்றும் ஈழத் தமிழ் பாணியில் சிலர் பின்னணியில் பேசுவதும் நமக்கு தெளிவானது. மேலும், வீடியோவில் வரும் ஆட்டோ இந்தியாவில் இருப்பது போல இல்லை. 

எனவே, இது இலங்கையில் நடந்ததா என்ற சந்தேகத்தில், நமது Fact Crescendo Sri Lanka குழுவினரை தொடர்பு கொண்டோம். அவர்கள் இந்த வீடியோவை பார்வையிட்ட பின், இதன்பேரில் இலங்கை அளவில் நீண்ட நேரம் தகவல் தேடிய அவர்கள், இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள Gampola District Police Station எல்லைக்குட்பட்ட Galaha police station – Acting OIC – Mr Rodrigo என்பவரிடம் விளக்கம் கேட்டனர்.

அவர், ‘’இது எங்களது காவல் எல்லைக்குள் நடந்த விவகாரம். இதன் பின்னணியில், மத ரீதியான காரணம் எதுவும் இல்லை. குறிப்பிட்ட முஸ்லீம் நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் திடீரென அவ்வாறான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை அப்போதே கைது செய்து, போலீஸ் காவலில் வைத்துள்ளோம். தற்சமயம், காயமடைந்த நபருக்கு மருத்துவமனை சிகிச்சை தரப்பட்டு வருகிறது,’’ என்று கூறினார்.

இதுதவிர இந்த வீடியோவில் பதிவாகியுள்ள சம்பவம், கண்டியின் Galaha பகுதியில்தான் நிகழ்ந்தது என்றும், அதில் உள்ளவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறி சிங்கள மொழியிலும் சிலர் தகவல் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால், இதுபற்றி முன்னணி சிங்கள ஊடகங்கள் அல்லது ஈழத் தமிழ் ஊடகங்களோ எந்த செய்தியும் வெளியிட்டதாகக் காணக் கிடைக்கவில்லை.

சிங்களத்தில் வெளியிடப்பட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Sinhala FB Post Link I Archived Link

கூடுதல் ஆதாரத்திற்காக, நமது இலங்கை குழுவினர் அந்த சிசிடிவி காட்சியில் வரும் தெருவை அடையாளம் கண்டறியும் பணியில் இறங்கினர். அப்போது, அந்த இடம் Galaha Road-ல் உள்ள Vijayaluxmi Stores முகப்பு பகுதி என்று தெளிவாக தெரியவந்தது. அந்த கடையின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, பேசி, இந்த சம்பவம் அங்குதான் நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், குறிப்பிட்ட தெரு மற்றும் கடை அமைந்துள்ள பகுதியின் சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் இணையத்தில் காண கிடைக்கவில்லை. சற்று பழைய புகைப்படங்கள்தான் இணையத்தில் கிடைக்கின்றன. அதிலும், அந்த கட்டிடத்தை விட்டு சற்று தள்ளி பச்சை, நீல நிறம் பூசிய ஆட்டோக்கள் உள்ளதைக் காணலாம். அதே ஆட்டோக்கள்தான், குறிப்பிட்ட வீடியோவின் பின்னணியிலும் வருகின்றன. 

எனவே, இலங்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் சிசிடிவி பதிவை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி தவறான தகவலை பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தொப்புள்கொடி உறவின் செயல்; இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False