மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியலான குட் கவர்னன்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் தமிழ்நாடு 18வது இடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஸ்ஸாம் முதல்வர் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "மாநில அரசுகள் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற பெயரில் வெளியிட்டது. அசாம் 1வது இடம். தமிழ்நாடு 18வது இடம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Ram Vengat என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 11ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளின் செயல்பாடு தொடர்பாக ஆய்வு செய்து பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 1)விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், 2) வணிகம் & தொழில்கள், 3) மனித வள மேம்பாடு, 4) பொது சுகாதாரம், 5.) பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், 6) பொருளாதார நிர்வாகம், 7) சமூக நலன் & மேம்பாடு, 8) நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, 9) சுற்றுச்சூழல் மற்றும் 10) குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை என 10 தலைப்புகளில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

அசல் பதிவைக் காண: darpg.gov.in I Archive

அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்படுவது இல்லை. இந்திய அரசின் ஒன்றிய ஆட்சி பரப்பு பகுதிகள் (யூனியன் பிரதேசம்), வடகிழக்கு - மலையக மாநிலங்கள் மற்றும் இதர மாநிலங்கள் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதர மாநிலங்களும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (அரசு வெளியிட்ட முழு அறிக்கை, பக்கம் 22) 2020-21ம் ஆண்டுக்கான பட்டியல் 2021 டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். நீதித் துறை மற்றும் பொது பாதுகாப்பு பிரிவில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்தது. சுகாதாரத்தில் நான்காம் இடம் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: pib.gov.in I Archive 1 I pib.gov.in I Archive 2

ஒவ்வொரு பிரிவிலும் ஒட்டுமொத்த அளவில் மாநிலங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு அடங்கிய இதர மாநிலங்கள் பிரிவில் குஜராத் முதலிடம் பிடித்திருந்தது. அஸ்ஸாம் எந்த ஒரு விஷயத்திலும் முதலிடம் பிடிக்கவில்லை. மேலும் வடகிழக்கு – மலையக மாநிலங்கள் பட்டியலில் ஹிமாச்சல பிரதேசம் முதலிடத்தை பிடித்திருந்தது. இப்படி இருக்கும் போது எப்படி அஸ்ஸாம் முதலிடத்தை பிடித்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. மேலும், இது 2020-21ம் ஆண்டுக்கு உரியப் பட்டியல் என்பதால் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கீடு ஆகும். இதற்கும் தி.மு.க அரசுக்கும் சம்பந்தம் இல்லை. எதற்காக ஸ்டாலின் படத்தை வைத்துள்ளார்கள் என்றும் தெரியவில்லை.

இந்த சூழலில் புதிதாக ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு 18வது இடம் கிடைத்ததாகவும், பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம் மாநிலம் முதலிடம் பிடித்தது போலவும் பதிவிடப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

மத்திய அரசு வெளியிட்ட நல்லாட்சி குறியீடு பிடிஎஃப் நமக்குக் கிடைத்தது அதைப் பார்த்த போது தமிழ்நாடு இதர மாநிலங்கள் பட்டியலில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தது. அஸ்ஸாம் வடகிழக்கு மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டையும் அஸ்ஸாமையும் ஒப்பிட்டு மத்திய அரசு பட்டியல் வெளியிட்டது தவறானது என்பது உறுதியானது.

மத்திய அரசு வெளியிட்ட 10 தலைப்புகள் அடிப்படையில் தமிழ்நாடு, அஸ்ஸாம் இடையேயான ஒப்பீட்டைப் பார்த்தோம். ஒன்றிரண்டைத் தவிர மற்ற அனைத்திலும் தமிழ்நாடு அதிக புள்ளிகள் பெற்றிருந்தது. ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் பார்த்தாலும் கூட தமிழ்நாட்டை அஸ்ஸாம் முந்த வாய்ப்பு இல்லை என்பது புரிந்தது.

1) விவசாயம் தமிழ்நாடு (4ம் இடம்) 0.485 புள்ளிகள் I அஸ்ஸாம் (5ம் இடம்) 0.406 புள்ளிகள்.

2) வணிகம் & தொழில்கள் தமிழ்நாடு (10) 0.553 புள்ளிகள் I அஸ்ஸாம் (4) 0.645 புள்ளிகள்.

3) மனித வள மேம்பாடு தமிழ்நாடு (8) 0.522 I அஸ்ஸாம் (6) 0.441

4) பொது சுகாதாரம் தமிழ்நாடு (4) 0.629 I அஸ்ஸாம் (11) 0.215

5) பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் தமிழ்நாடு (9) 0.644 I அஸ்ஸாம் (10) 0.572

6) பொருளாதார நிர்வாகம் தமிழ்நாடு (5) 0.571 I அஸ்ஸாம் (4) 0.426

7) சமூக நலன் & மேம்பாடு தமிழ்நாடு (4) 0.540 I அஸ்ஸாம் (10) 0.334

8) நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தமிழ்நாடு (1) 0.557 I அஸ்ஸாம் (11) 0.187

9) சுற்றுச்சூழல் மற்றும் தமிழ்நாடு (2) 0.369 I அஸ்ஸாம் (4) 0.260

10) குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை தமிழ்நாடு (9) 0.182 I அஸ்ஸாம் (3) 0.556

நம்முடைய ஆய்வில், நல்லாட்சி குறியீடு 2020-21ம் ஆண்டுக்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டை அ.தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்துள்ளது. நல்லாட்சி குறியீட்டில் ஒட்டுமொத்த மாநிலங்கள் பட்டியல் அடிப்படையில் தர ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடும், அஸ்ஸாமும் வேறு வேறு பிரிவில் இடம் பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 தலைப்புகள் பட்டியலில் பெரும்பாலானவற்றில் அஸ்ஸாமைக் காட்டிலும் தமிழ்நாடு புள்ளி அதிகம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நல்லாட்சி குறியீட்டில் அஸ்ஸாம் முதலிடம் பெற்றது என்றும் தமிழ்நாடு 18வது இடம் பிடித்தது என்றும் பகிரப்படும் தகவல் விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நல்லாட்சி குறியீட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுக்கு 18வது இடம் கிடைத்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாட்டுக்கு 18வது இடம் கிடைத்ததா?

Fact Check By: Chendur Pandian

Result: False