
இலங்கையில் உள்ள அனுமான் பாதம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் பதிவின் லிங்க் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த லிங்கை திறந்து பார்த்த போது 2020 அக்டோபர் 22ம் தேதி ரீஷேர் செய்யப்பட்ட பதிவு அது.
ஃபேஸ்புக் பதிவு ஒன்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்திருந்தனர். அதில், “இலங்கையில் உள்ள அனுமான் பாதம். ஷேர் பண்ணுங்க நல்ல செய்தி வீடு தேடி வரும்” என்று இருந்தது.
உண்மையில் அந்த பதிவு 2019ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி Jagadeesh Kumar என்பவரால் பதிவிடப்பட்டு இருந்தது. அதை 39 ஆயிரம் பேர் ஷேர் செய்திருந்தனர். பலரும் இதை ஷேர் செய்யவே இந்த பதிவை ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
இந்த புகைப்படத்தில் இருப்பது அனுமானின் பாதம்தானா, இதை ஷேர் செய்தால் நல்ல செய்தி வீடு தேடி வரும் என்கிறார்களே அது உண்மையா என்பது போன்ற மதம் சார்ந்த நம்பிக்கைக்குள் நாம் செல்லவில்லை. இந்த புகைப்படம் இலங்கையில் உள்ளதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது அனுமாரின் காலடித் தடம் என்று இந்த படத்தைப் பலரும் ஷேர் செய்து வந்திருப்பதைக் காண முடிந்தது. பல தெளிவான புகைப்படங்கள் நமக்கு கிடைத்தன. அதில் உள்ள நபர்களைப் பார்க்கும் போது இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ளவர்களைப் போல இருந்தது. எனவே, இந்த புகைப்படம் உண்மையில், இலங்கையில்தான் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் வந்தது.
அசல் பதிவைக் காண: zeenews.india.com I Archive 1 I talkpundit.com I Archive 2
தொடர்ந்து தேடிய போது, ஜீ நியூஸ் இணையதள பக்கத்தில் தாய்லாந்தில் உள்ள அனுமான் காலடித்தடம் என்று குறிப்பிட்டு இந்த படத்தை பகிர்ந்திருந்தனர். தொடர்ந்து பல பதிவுகளில் இது தாய்லாந்தில் உள்ள அனுமாரின் பாதம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
தாய்லாந்தில் எந்த இடத்தில் இந்த பாதம் உள்ளது என்று தேடிப் பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தைத் தவிர வேறு எந்த ஒரு படமும் செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, இந்த பாதம் தாய்லாந்தில்தான் உள்ளதா என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
சரி இலங்கையில் அனுமார் பாதம் என்று ஏதும் உள்ளதா என்று தேடினோம். இலங்கையில் நுவரெலியா என்ற இடத்தில் சீதை கோவில் என்று ஒன்று உள்ளதாகவும், அங்கு அனுமனின் காலடித் தடம் உள்ளதாகவும் செய்திகள் கிடைத்தன.
அசல் பதிவைக் காண: srilanka.travel-culture.com I Archive 1 I tripadvisor.in I Archive 2
அந்த கோவிலில் உள்ள அனுமன் தடம் படத்தைத் தேடினோம். srilanka.travel-culture.com என்ற இணையதளத்தில் அந்த கோவில் மற்றும் அனுமன் பாதம் படங்கள் நமக்கு கிடைத்தன. அது சிறியதாக இருந்தது. அதற்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தில் உள்ள காட்சிக்கும் தொடர்பில்லை.
வீடியோ ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தோம். கோவிலில் எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தை ஒப்பிடுகையில் மிகச் சிறிய பாதங்கள் இருப்பதைக் காண முடிந்தது.
நம்முடைய ஆய்வில்,
இந்த புகைப்படம் தாய்லாந்தில் எடுக்கப்பட்டதாக பலரும் பகிர்ந்து வருவதை காண முடிந்தது.
இலங்கையில் சீதா கோவிலில் அனுமன் பாதம் இருப்பதாக தகவல் கிடைத்தன. ஆனால், அந்த பாதத்துக்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது.
இதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள அனுமன் பாதம் என்று பகிரப்படும் படம் இலங்கையில் எடுக்கப்பட்டது இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அனுமான் பாதம் இலங்கையில் இல்லை என்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
