FACT CHECK: உணவகம் முன்பு தொழுகை செய்த மைக் டைசன்- உண்மை என்ன?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

அமெரிக்காவில் இஸ்லாமியர்கள். கறுப்பினத்தவர்கள் அனுமதியில்லை என்று ஒரு உணவகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு மைக் டைசன் சென்று கடை முன்பு தொழுகை நடத்தியதாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உணவகம் முன்பு மைக் டைசன் தொழுகை செய்வது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க நாட்டின் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையின் வெளியே எழுதப்பட்ட வாசகம் “நாய்கள், முஸ்லிம்கள், மற்றும் கருப்பினத்தவர்கள், உள்ளே வர அனுமதியில்லை” இதை கேள்விப்பட்ட அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தற்போதைய உலக குத்துச்சண்டை சாம்பியன் சுவிடிஷ் படு ஜேக் மற்றும் (இமாமாக தொழவைக்கும்) உலக கிக் பாக்ஸர் சாம்பியன் ஆமிர் அப்துல்லா அந்த கடைக்கு சென்று ஒலுச்செய்து நடுக்கடையில் முசல்லாவிரித்து ஜமாஅத் ஆக தொழும் காட்சி. இதை கண்டு கடை நிர்வாகிகள் ஒடுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்… மாஷா அல்லாஹ்…” என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ பதிவை Sardhar Ali என்பவர் 2020 அக்டோபர் 21 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமூக ஊடகம் வளர்ந்துவிட்ட நிலையில் அமெரிக்காவின் முன்னணி நகரங்களுள் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கடையில் நாய்கள், இஸ்லாமியர்கள், கறுப்பினத்தவர்கள் அனுமதியில்லை என்று எழுதி வைக்க முடியுமா, அப்படி எழுதி வைத்தால் அந்த கடை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், வீடியோவை பார்க்கும் போது அது கடை போலவும் இல்லை. ஒரு பாக்சிங் செய்யும் ரிங் முன்பு அவர்கள் தொழுகை நடத்துகின்றனர். ஒருவேளை பயிற்சிக் கூடத்துக்கு அருகே உணவு தயாரிக்கும் இடத்தை வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. 

அமெரிக்காவில் ஒரு கடைக்கு முன்பு மைக் டைசன் சென்று தொழுகை நடத்தினால் அதுவே மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். அந்த உணவகத்துக்கு வந்திருந்தவர்கள் வீடியோ எடுத்திருப்பார்கள், மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். எனவே, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டது போல எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

மைக் டைசன், தொழுகை, உணவகம் உள்ளிட்ட கீ வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. ஒரு தளத்தில் ஸ்வீடன் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் Badou Jack, மைக் டைசனுடன் இணைந்து தொழுகை செய்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: siasat.com I Archive I instagram.com I Archive 2

Badou Jack இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவைப் பார்த்தோம். அதில் எந்த இடத்திலும் அமெரிக்காவில் உணவகத்துக்குள் இஸ்லாமியர்கள் அனுமதியில்லை என்று கூறியதால் அங்கு சென்று தொழுகை நடத்தினோம் என்று இல்லை. மேலும், அவருடைய பதிவுகளில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் டி.ஆர் (T R)  என்ற லோகோ தெரிகிறது. 

அசல் பதிவைக் காண: instagram.com I Archive

அந்த லோகோவுக்கு முன்பாக மைக்டைசன் உள்ளிட்டவர்கள் புகைப்படம், வீடியோக்கள் எடுத்திருப்பதைக் காண முடிந்தது. டி.ஆர் என்பது என்ன என்று தேடிய போது டைசன் ரான்ச் (Tyson Ranch) என்று தெரிந்தது. அது மைக் டைசன் நடத்தி வரும் நிறுவனம் என்பதும் தெரிந்தது. இதன் மூலம் மைக் டைசனின் குத்துச்சண்டை பயிற்சி அரங்கில் இந்த தொழுகை வீடியோ எடுத்திருப்பது உறுதியானது.

Archive

இந்த வீடியோவைப் பற்றி மேலும் தேடிய போது, தொழுகையை வழிநடத்திய அமர் அப்துல்லாவின் பேட்டி கிடைத்தது. மூன்று பேரும் இணைந்து தொழுகை நடத்தியதன் பின்னணி என்ன என்று அவர் விளக்கம் அளித்திருந்தார். தொழுகையின் சிறப்பைப் பற்றி அவர் சொல்வதாக அந்த வீடியோ இருந்தது. எந்த இடத்திலும் இஸ்லாமியர்கள் அனுமதியில்லை என்று கூறிய உணவகம் முன்பு நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து தொழுகை நடத்தினோம் என்று அவர் கூறவில்லை.

இதன் மூலம், மைக்டைசனின் குத்துச்சண்டை பயிற்சி அரங்கில் மைக் டைசன் உள்ளிட்டவர்கள் தொழுகை நடத்திய வீடியோவை எடுத்து, தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இஸ்லாமியர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறிய உணவகம் முன்பு மைக் டைசன் உள்ளிட்டவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மைக் டைசன் தன்னுடைய இடத்தில் தொழுகை செய்ததை தவறான தகவலுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உணவகம் முன்பு தொழுகை செய்த மைக் டைசன்- உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •