FACT CHECK: பள்ளிக் கல்வித் துறைக்கு வெறும் ரூ.32 கோடி ஒதுக்கிவிட்டு, கருணாநிதி நினைவிடத்துக்கு ரூ.39 கோடி ஒதுக்கப்பட்டதா?
தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துவிட்டு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்துக்கு 39 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் பதிவு ஒன்று போட்டோஷாப் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "தமிழகத்திலுள்ள மொத்த பள்ளிக் கல்வித்துறைக்கு 32 கோடியாம்! ஒத்த சுடுகாட்டுக்கு மட்டும் 39 கோடியாம்! சமூககுப்பை. நீங்க எப்டி வேண்ணாலும் பந்து போடுங்க... அத எப்டி சிக்ஸராக அடிக்கணும்னு எங்களுக்கு தெரியும்பா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தமிழ் வேந்தன் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 31 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக பள்ளிக் கல்வித் துறை என்பது மிகப்பெரிய அமைப்பு. தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், பள்ளிக் கூடங்கள், தொடக்கப் பள்ளி இயக்ககம், பள்ளிக் கல்வி இயக்ககம், அரசுத் தேர்வு இயக்ககம், பொது நூலக இயக்ககம், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம், ஆசிரியர் தேர்வு வாரியம், ஒருங்கிணைந்த கல்வி இயக்ககம் என்று பல துறைகளைக் கொண்டது. இவ்வளவு பெரிய துறைக்கு வெறும் 32 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் கட்ட ரூ.39 கோடி ஒதுக்கப்பட்டதை விமர்சிக்கும் வகையில், வதந்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கில் பதிவிட்டது போல் உள்ளது. எனவே, இந்த தகவல் உண்மையா என ஆய்வு செய்தோம்.
அசல் பதிவைக் காண: dinamani.com I Archive
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்த நிதி எவ்வளவு என்பது தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம். 32,599 கோடி ரூபாய் இந்த நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்டதாக செய்திகள் கிடைத்தன.
அசல் பதிவைக் காண: tnbudget.tn.gov.in I Archive
இதை உறுதி செய்துகொள்ள தமிழ்நாடு அரசின் 2021-22 பட்ஜெட்டை பார்த்தோம். அதில், 43வது பக்கத்தில் 101வது பிரிவில் பள்ளிக் கல்வித் துறை இடம் பெற்றிருந்தது. அதில், 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு 2021-22 நிதியாண்டில் வெறும் 32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கருணாநிதி நினைவிடம் கட்ட ரூ.39 கோடி ஒதுக்கிய நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு வெறும் 32 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:பள்ளிக் கல்வித் துறைக்கு வெறும் ரூ.32 கோடி ஒதுக்கிவிட்டு, கருணாநிதி நினைவிடத்துக்கு ரூ.39 கோடி ஒதுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False