FACT CHECK: மோசஸ் காலத்தில் செங்கடலில் மூழ்கிய குதிரை வண்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டதா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

பைபிளில் இடம் பெற்ற மோசஸ் கதையில் வரும் எகிப்து மன்னனின் குதிரைப் படை வண்டி செங்கடலில் கிடைத்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கடலில் சிதைந்து போன அந்தக் காலத்து குதிரை அல்லது மாட்டு வண்டி போன்று இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தில், “மோசேயின் காலத்தில் செங்கடல் பிளந்து பாரோவனின் படைகளை கடலுக்குள் கவிழ்த்து போட்டாரே அந்த குதிரை வண்டியின் சக்கரம் கண்டுபிடிக்க பட்டது அந்த படங்கள் தான் இது இதை கண்டிப்பாக எல்லோருக்கும் ஷேர் செய்யுங்கள் நம் தேவன் மெய்யான தேவன் என்பதை எல்லோரும் அறிய வேண்டும் ஆமென்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை Kisvanth என்ற ஃபேஸ்புக் ஐடியைக கொண்டவர் 2021 செப்டம்பர் 2ம் தேதி பகிர்ந்திருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive

இதே பதிவை 2016ம் ஆண்டில் இருந்து பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. பல பதிவுகள் பல ஆயிரக் கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வந்திருப்பதையும் காண முடிந்தது. இப்போதும் இதைப் பலரும் பகிரவே, ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

இயேசு பிறந்து 2000ம் ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எகிப்தில் இருந்து செங்கடல் வழியாக யூதர்கள் தப்பித்த சம்பவம் நடந்ததாக பைபிளில் கூறப்படுகிறது. பொதுவாக, தேர் அல்லது வண்டி என்பது மரம் மற்றும் உலோகத்தால் செய்யப்படுவதாகும். பல நூற்றாண்டுகள் கழிந்தும் அப்படியே இருக்கிறது என்பது ஆச்சரியத்தை அளித்தாலும் நம்பும் வகையில் இல்லை. படத்தை நன்கு உற்றுப் பார்த்தால் சக்கரம் பழைய காலத்து ரயில் இன்ஜினில் உள்ளது போல் இருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வரவே, இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடிய போது பைபிள் வரலாறு, பண்டைய எகிப்து வரலாறு என்று சில பதிவுகள் கிடைத்தன. அதே நேரத்தில் மிகத் தெளிவான படங்கள் நமக்கு கிடைத்தன. அவற்றைப் பார்க்கும் போது படத்தில் இருப்பது அந்தக் காலத்துக் குதிரை வண்டி இல்லை, சிதைவுற்ற ரயில் இன்ஜின் என்பது தெரிந்தது.

பழைய வாகனங்கள், கட்டமைப்புகளை பவழப் பாறை மற்றும் மீன் வளர்ச்சிக்கு என்று கடலில் விடுவது வழக்கம். அப்படி பழைய ரயில் இன்ஜினை ஏதும் விட்டுள்ளார்களா என்று கூகுளில் தேடினோம். அப்போது 1940களில் ஜெர்மன் விமானப்படை தாக்கியதில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த ரயில் இன்ஜின் என்று ஒரு செய்தி கிடைத்தது. அந்த பதிவில் வெளியான படமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படமும் ஒன்றாக இருந்தன. எனவே, அது பற்றி தொடர்ந்து தேடினோம்.

அசல் பதிவைக் காண: alamy.com I Archive 1 I divemagazine.co.uk I Archive 2

1941ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த எஸ்எஸ் திஸ்டல்கார்ம் (SS Thistlegorm) என்ற கப்பல் எகிப்தின் செங்கடல் அருகே ஜெர்மன் விமானப் படையால் மூழ்கடிக்கப்பட்டது என்ற செய்தி கிடைத்தது. இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் இருந்து மோட்டார் சைக்கிள்கள், ஆயுதங்கள், ரயில் பெட்டிகள், நீராவி ரயில் இன்ஜின்களை ஏற்றிக் கொண்டு எகிப்தின் அலெக்சாண்டிரியா நோக்கி இந்த கப்பல் வந்துகொண்டிருந்தது. ரயில்கள் எகிப்தின் தேசிய ரயில்வேக்கும், ஆயுதங்கள் எகிப்து ராணுவத்துக்கும் அளிப்பதற்காக கொண்டு வரப்பட்டன. 

மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி, ஜெர்மனி ஆதிக்கம் அதிகம் இருந்ததால் தென் ஆப்ரிக்கா வழியாக நீண்ட தூரம் பயணித்து கப்பல் வந்தது. சூயஸ் கால்வாயைக் கடந்து அலக்சாண்டிரியா செல்ல இருந்த நிலையில் ஜெர்மன் விமானப் படையால் தாக்கப்பட்டு, கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

கப்பல் மூழ்கிய பகுதி உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் 1950ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அப்போது சிதைந்திருந்த மோட்டார் சைக்கிள்கள், கப்பல் கேப்டனின் பெட்டகம், கப்பலின் மணி ஆகியவை மீட்கப்பட்டன. அதன் பிறகு அந்த கப்பலை அனைவரும் மறந்துவிட்டனர். 1990களில் மீண்டும் அந்த கப்பலை கண்டறிந்தனர். தற்போது சிதைவுற்ற கப்பலை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு வருகின்றனர் என்று செய்தி கிடைத்தது.

இது தொடர்பான வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். யூடியூபில் இந்த ரயில் இன்ஜின் தொடர்பாக சில வீடியோக்கள் வெளியிடப்பட்டிருப்பது கிடைத்தது. மூழ்கிய கப்பலை ஆய்வு செய்ய சென்றவர்கள் எடுத்த வீடியோக்கள் அது. ஒரு வீடியோவில் சரியாக 0.58வது விநாடியில் இருந்து நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ளது போன்ற அதே காட்சியை காண முடிந்தது. 

இதன் மூலம் மோசஸ் காலத்தில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட எகிப்து மன்னனின் குதிரைப் படையின் வண்டி என்று பகிரப்படும் படம் 1940களில் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்த ரயில் இன்ஜினின் மிச்சம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

செங்கடலை மோசஸ் தலைமையில் யூதர்கள் கடந்ததன் அடையாளமாக எகிப்து மன்னனின் குதிரைப் படை வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பரவும் படம் 1941ல் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த ரயில் இன்ஜின் படம் என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோசஸ் காலத்தில் செங்கடலில் மூழ்கிய குதிரை வண்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False