FACT CHECK: 2014-ம் ஆண்டில் இருந்து பரவும் புதிய ரூ.5000 நோட்டு வதந்தி!
புதிய 5000 ரூபாய் நோட்டு நாளை வெளியாகிறது என்று 2014ம் ஆண்டில் இருந்து வதந்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின் விவரம்:
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் ஆப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது பற்றிய விவரம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதில், பிரதமர் மோடி நினைவு நாணயங்கள் வெளியிடும் புகைப்படம் இருந்தது. மேலும் ரூ.5000ம் நோட்டு போன்று ஒரு புகைப்படம் இருந்தது. நாளை வெளியாகிறது புதிய 5000ம் ரூபாய் நோட்டு என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கில் யாராவது இதை ஷேர் செய்திருக்கிறார்களா என்று பார்த்தோம். 2021ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி Naveen Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் இந்த பதிவை பகிர்ந்திருந்தார். பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி புதிய 5000 ரூபாய் நோட்டுக்களை வெளியிடப் போகிறார் என்று பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவை 2014ம் ஆண்டில் இருந்து பலரும் பகிர்ந்து வருவதை காண முடிகிறது. பிரபல புலனாய்வு வார இதழான ஜூனியர் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூட இந்த பதிவு 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவிடப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டில் பதிவு பகிரப்பட்டு வருகிறது, ஆனால் 5000ம் ரூபாய் நோட்டு மட்டும் இன்னும் அறிமுகமாகவே இல்லை.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஏற்கனவே, 2019ம் ஆண்டு புதிய 1000ம் ரூபாய் நோட்டு அறிமுகம் என்று வதந்தி பரவியது. அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் இது தொடர்பாக கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதே போன்று ஒரு லட்ச ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது என்று வதந்தி பரவியது. அதுவும் போலியானது என்று ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த சூழலில், ரூ.5000 நோட்டு தொடர்பாக பரவும் தகவல் வதந்தி என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம்.
முதலில் பிரதமர் மோடி நாணயம் வெளியிடும் படத்தை பார்த்தோம். அது 2015ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் 125வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட 125 ரூபாய் நினைவு நாணயம் என்பது தெரியவந்தது.
5000 ரூபாய் நோட்டு என்று பரவும் படத்தை பார்க்கும் போது, பழைய 1000ம் ரூபாய் நோட்டை எடிட் செய்யப்பட்டது போல உள்ளது. பழைய 1000ம் ரூபாய் நோட்டில், பழைய 500 ரூபாய் நோட்டில் உள்ள 5ஐ மட்டும் எடுத்து வைத்து எடிட் செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
அசல் பதிவைக் காண: paisaboltahai.rbi.org.in I Archive I rbi.org.in
அடுத்தது ரிசர்வ் வங்கி ரூ.5000 நோட்டை வெளியிடத் திட்டமிட்டுள்ளதா, அது தொடர்பான படத்தை வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். ரிசர்வ் வங்கி இணையதளத்தை பார்த்தபோது, ரூ.5000 நோட்டு இல்லை. மேலும் 2014ம் ஆண்டு இந்த வதந்தி பரவிய போது ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்த செய்தியும் கிடைத்தது. அதில், 5000 ரூபாய் நோட்டை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இதன் மூலம் ரூ.5000 நோட்டு போலியானது, தகவல் தவறானது என்று உறுதியானது. இதன் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
அசல் பதிவைக் காண: ndtv.com I Archive
முடிவு:
மத்திய அரசு புதிதாக 5000ம் ரூபாய் நோட்டை வெளியிடுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:2014-ம் ஆண்டில் இருந்து பரவும் புதிய ரூ.5000 நோட்டு வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False