சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து கார் வாங்கியவர், விபத்தில் உயிரிழந்தாரா?

False இந்தியா | India சமூக ஊடகம் | Social

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி சிகரெட் வாங்க ஆன பணத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியவர், கார் விபத்தில் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மேஜை முழுக்க நாணயங்கள், பணத்துடன் அடுக்கி வைத்தபடி ஒருவர் அதன் முன்பு இருந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்த மனிதன் கடந்த 6 வருடமாகப் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டார். புகை பிடிக்கும் பணத்தையெல்லாம் சேமித்து, அந்த பணத்தில் ஒரு Car வாங்கினார். பிறகு Car விபத்தில் இறந்துவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சிகரெட் பிடிப்பதை நிறுத்தி, அந்த பணத்தை சேமித்து கார் வாங்கியவர், கார் விபத்தில் உயிரிழந்தார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதை பார்ப்பவர்களுக்கு இதற்கு அவர் சிகரெட் பிடித்து உயிரோடு இருந்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனால் சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டாம் என்று கூறுகிறார்களோ என்பது போல பதிவு உள்ளது. எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது, பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இவற்றுக்கு இடையே 2017 ஏப்ரல் 13ம் தேதி துருக்கி மொழியில் வெளியான செய்தி நமக்குக் கிடைத்தது. அதை மொழி பெயர்த்தபோது சிகரெட் பிடிப்பதை நிறுத்தி, அந்த பணத்தை சேமித்து 2 வர்த்தக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கியவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியைப் பார்த்தோம். 

உண்மைப் பதிவைக் காண: turkiyegazetesi.com.tr I Archive

துருக்கி நாட்டின் டென்ஸ்லி என்ற பகுதியைச் சார்ந்த மெஹ்மெட் டோக் (Mehmet Tok) என்பவர் 22 வருடங்காக சிகரெட் பிடித்து வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று நெஞ்சுவலி, கையில் உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகரெட் பழக்கத்தை நிறுத்தும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து வைக்க ஆரம்பித்துள்ளார். எட்டு ஆண்டுகளில் 70 ஆயிரம் துருக்கிய லிராக்களை அவர் சேர்த்துள்ளார். இந்த பணத்தைச் கொண்டு அவர் இரண்டு கார் மற்றும் ஒரு மோட்டார் பைக்கை வாங்கியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

அவர் அளித்திருந்த பேட்டியில், “பணம் சேர்க்க ஆரம்பித்து ஓராண்டு முடிந்ததும் உண்டியைத் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எவ்வளவு பணத்தை இதுவரை என் உடல் நலனுக்கு எதிராக செலவு செய்துள்ளேன் என்று உணர்ந்த போது அழுகை வந்தது. கடந்த காலங்களில் சிகரெட்டக்காக செலவு செய்ததை எண்ணி வருத்தமுற்றேன். புகைபிடிப்பவர்களும் அந்த பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த பேட்டி 2017ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அப்போதே அவர் சிகரெட் பழக்கத்தை நிறுத்தி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். அதன் பிறகு விபத்தில் அவர் உயிரிழந்தாரா என்று தேடிப் பார்த்தோம். அவர் உயிரிழந்ததாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அவர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் உள்ளாரா என்று தேடிப் பார்த்தோம்.

அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை கண்டறிந்தோம். அதில் சிகரெட் பழக்கத்தை நிறுத்தியது தொடர்பாக வெளியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட் இருந்தது. தற்போது அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

தொடர்ந்து அவர் தன்னுடைய புகைப்படத்தை அப்டேட் செய்து வந்திருப்பதைக் காண முடிந்தது. கடைசியாக 2025 ஜனவரி 26ம் தேதி கால்பந்தாட்ட போட்டி ஒன்றின் வீடியோவை அவர் ஷேர் செய்திருந்தார். இதன் மூலம் அவர் இப்போதும் நலமாக இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் அவர் உயிரிழந்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.

முடிவு:

சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிட்டு, சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து கார் வாங்கியவர், கார் விபத்தில் உயிரிழந்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து கார் வாங்கியவர், விபத்தில் உயிரிழந்தாரா?

Written By: Chendur Pandian  

Result: False