வட இந்திய சாமியார் அறிமுகம் செய்த HMPV தடுப்புமுறை என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social தவறாக வழிநடத்துபவை I Misleading

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் இருக்க வட இந்திய சாமியார் ஒருவர் அறிமுகம் செய்த புதிய முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாமியார் மற்றும் அவரது சீடர்கள் குலவை ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் புது வைரஸ் பரவுவதைத் தடுக்க….

முன்பு மணியடித்து விரட்டியதை போன்று,தற்போது வடநாட்டு சாமிகள் புது முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

ம்ம்ம்.ஆரம்பியுங்கள் 😂” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சீனாவில் கோவிட் வைரஸைத் தொடர்ந்து தற்போது ஹியூமன் சீனா இப்போது மனித மெட்டாப்நியூமோவைரஸ் (Human metapneumovirus (HMPV) தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. “இது சாதாரண வைரஸ் தொற்றுதான், எனவே பயப்பட வேண்டியது இல்லை. மேலும் இது புதிது இல்லை, பல ஆண்டுகளாக உள்ள வைரஸ்தான்” என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இருப்பினும் இந்திய ஊடகங்களில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த சூழலில் சீனாவின் இந்த வைரஸ் தொற்று பரவுவதைத் தவிர்க்க புதிய வழிமுறை ஒன்றை வட இந்திய சாமியார் ஒருவர் அறிமுகம் செய்துள்ளார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் அந்த சாமியார் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க இதை செய்தாரா அல்லது நையாண்டி செய்யும் வகையில் இந்த பதிவு வெளியாகி உள்ளதா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024 நவம்பரில் இந்த வீடியோ ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அந்த வீடியோ பற்றி இந்தியில் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் அதைப் பார்த்தோம். “தாதா குரு காபர்மாலில் மா கப்பர்வாலியை அழைத்தார்” என்று வந்தது. அது பற்றித் தொடர்ந்து தேடிய போது, நர்மதா நதி உற்பத்தியாகும் மலைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் யாத்திரை என்று தெரியவந்தது. யாத்திரை சென்ற இடத்தில் குலவை எழுப்பி பக்தி பாடல்களை அவர்கள் பாடியிருப்பது தெரிந்தது.

Narmada Mission என்ற பெயரில் வீடியோவில் உள்ள சாமியார் இயற்கை பாதுகாப்பு சேவை அமைப்பை நடத்தி வருவது தெரியவந்தது. இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் பயணங்கள் மேற்கொண்டு வருவதாக பல வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. சீனாவில் குளிர் காலத்தில் நிமோனியா பாதிப்பு வழக்கமான ஒன்று தான். இந்த ஆண்டு புதிய வைரஸ் என்று செய்தி ஊடகங்களில் பீதி கிளப்பிவிடப்பட்டது. அதுவும் டிசம்பர் இறுதியில் தான் இந்த தகவல் வெளியானது. ஆனால், வீடியோவோ 2024 நவம்பர் இறுதியில் பதிவிடப்பட்டுள்ளது.

வைரஸ் கிருமியை ஒழிக்க பிரார்த்தனை செய்ததாக அந்த பதிவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் சாமியார் ஒருவரின் வீடியோவை சமூக ஊடகங்களிலிருந்து எடுத்து, வைரஸ் கிருமி பரவலைத் தடுக்க புது வழிமுறையை பின்பற்றுவதாக தவறான தகவலைச் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வட இந்திய சாமியார் ஒருவர் ஆன்மிக பயணம் மேற்கொண்ட வீடியோவை எடுத்து வைரஸ் கிருமி பரவாமல் இருக்க புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தினார் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பரப்பியிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:வட இந்திய சாமியார் அறிமுகம் செய்த HMPV தடுப்புமுறை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian  

Result: Misleading