விக்ரம் லேண்டர் சிக்னல் கிடைத்ததா?

அறிவியல் சமூக ஊடகம்

சந்திரயான் 2 விக்ரம் லேண்டரிடமிருந்து சிக்னல் கிடைத்ததாகவும் அதைத் தொடர்ந்து லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ISRO 2.png
Facebook LinkArchived Link 1Archived Link 2

4.22 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இஸ்ரோ தலைவர் சிவன் மிகவும் மகிழ்ச்சியாக செல்போனில் பேசுகிறார். எதிர் முனையில் பிரதமர் மோடி இந்தியில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து ஒரு பெரிய பாடல் ஒலிக்கிறது. ஜிஎஸ்எல்வி மார்க் 3, சந்திரயான் 2 உள்ளிட்டவை காட்டப்படுகிறது.

நிலைத் தகவலில், “சிக்னல் கிடைத்தது. சந்திரயான் 2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது. எத்தனை பேரின் உழைப்பு, எத்தனை பேரின் வேண்டுதல். சாதித்துக்காட்டியது இஸ்ரோ” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Babu Sabapathi என்பவர் 2019 செப்டம்பர் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சந்திரயான், மங்கள்யான், சந்திரயான் -2 என்று இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படக் கூடிய விஷயங்களை சாதித்துக் காட்டிவருகிறது இஸ்ரோ. நிலவுக்கு ரோவர் அனுப்பும் சந்திரயான் 2 திட்டம் மிகவும் வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 8ம் தேதி, விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவில் இறங்கும் கடைசி நிமிடத்தில் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இஸ்ரோ தலைவர் சிவனுடன் சேர்ந்து நாடே அழுதது. இதற்கும் அரசியல், மத சாயம் பூச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியர்கள் அதைப் புறக்கணித்துவிட்டனர்.

எப்படியும் விக்ரம் லேண்டருடன் இணைப்பை இஸ்ரோ ஏற்படுத்திவிடும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ளது. ஆனால், அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி தவறான தகவல் பரப்பும் விஷயம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. இதுதான் விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று பொய்யான படத்தைப் பரப்பினர். அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரின் சிக்னல் கிடைத்தது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது.

விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த முடிந்திருந்தால் அது பற்றி இஸ்ரோ வெளிப்படையாகவே அறிவித்திருக்கும். சந்திரயான் 2 திட்டத்தின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வையும் அது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. சிக்னல் கிடைத்தது பற்றி ஏதும் தகவல் வெளியிட்டுள்ளதா என்று தேடினோம்.

ஆனால் கடைசியாக இஸ்ரோ செப்டம்பர் 10ம் தேதிதான் ட்வீட் செய்திருந்தது. அதில், விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை ஆர்பிட்டர் சந்திரயான் 2 கண்டறிந்துள்ளது. ஆனால், அதிலிருந்து எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அனைத்து சாதகமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

ISRO 3.png

லேண்டருடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது என்றோ, அதற்கு மின் சப்ளை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றோ குறிப்பிடவில்லை.

ISRO 4.png

இது தொடர்பாக வேறு செய்தி ஏதும் உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது, லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அமெரிக்காவின் நாசா முயற்சி என்ற செய்தி கிடைத்தது. அதில் கூட லேண்டரில் இருந்து சிக்னல் கிடைத்தது என்று குறிப்பிடவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

தமிழில் வேறு யாராவது செய்தி வெளியிட்டுள்ளார்களா என்று தேடினோம். அப்போது tamil.gizbot.com வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், “சந்திரயான் 2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது: இஸ்ரோ – நாசா சேருகிறது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

Archived Link

இந்த தகவல் ஆச்சரியமாக இருந்தது. ஆங்கிலத்தில் இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், tamil.gizbot.com வெளியிட்ட செய்தியைத் தவிர வேறு யாரும் அந்த செய்தியை வெளியிடவில்லை என்பது தெரிந்தது. 

ISRO 5.png

tamil.gizbot.com செய்தியைப் படித்துப் பார்த்தோம். “லேண்டரின் உள்ள சூரியசக்தி தகடுகள் மூலம் மின் உற்பத்தி நடந்து வருகின்றது. இதை அதில் பொருத்தியுள்ள கருவிகள் பேட்டரிக்கு கடத்தி வருகின்றன. இந்நிலையில் விடுபட்ட தகவல் தொடர்பை மீட்பதில் குறைந்த வாய்ப்புகளே உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்” என்று எழுதியிருந்தனர்.

ISRO 6.png

தொடர்பையே ஏற்படுத்த முடியாத சூழலில், லேண்டரில் உள்ள சோலார் பேனல்களை விரித்து மின் உற்பத்தி செய்வதற்கான உத்தரவு எப்படி அனுப்பப்பட்டிருக்கும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் கட்டுரை எழுதப்பட்டு இருந்தது தெரிந்தது. மேலும், யார் இதை குறிப்பிட்டார்கள் என்று எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

இவர்கள் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவியிருக்கலாம் என்று தெரிகிறது.

நம்முடைய ஆய்வில்,

விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்று வருகிறோம் என்று மட்டுமே இஸ்ரோ கூறியுள்ளது கிடைத்துள்ளது.

நாசா மூலம் இணைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

லேண்டர் சிக்னல் கிடைத்தது என்று 2019 செப்டம்பர் 12ம் தேதி வரை எந்த ஒரு செய்தியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், விக்ரம் லேண்டர் சிக்னல் கிடைத்தது என்றும் லேண்டர் பேட்டரிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:விக்ரம் லேண்டர் சிக்னல் கிடைத்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False