28 நாட்கள் ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் வளையம் என்ற புகைப்படம் உண்மையா?

சர்வதேசம் | International

நிலவை ஒரே நேரத்தில், ஒரே இடத்திலிருந்து தொடர்ந்து 28 நாட்களுக்கு புகைப்படம் எடுத்து அதை அழகிய நிலவு வளையம் என்று ஒரே புகைப்படமாகத் தொகுக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமாவாசை. முழுநிலவு வரையிலான நாட்களில் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து நிலவை புகைப்படங்கள் எடுத்து அதை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக உருவாக்கி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 28 நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட வளர்பிறை நிலவின் அழகிய காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நம் ஊரிலேயே பல நாட்கள் மேகமூட்டம் காரணமாக நிலவைப் பார்க்க முடிவதில்லை. அப்படி இருக்க பனி மலைகள் கொண்ட இடத்தில் எப்படி தொடர்ந்து 28 நாட்கள் நிலவைப் புகைப்படம் எடுத்திருக்க முடியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடியபோது, பல ஆண்டுகளாக இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதை காண முடிந்தது. எல்லாவற்றிலும் தொடர்ந்து 28 நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை யார் எடுத்தது என்று எந்த தகவலையும் அளிக்காமல் பதிவிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: fineartamerica.com I Archive

தொடர்ந்து தேடிய போது fineartamerica.com என்ற இணையதளத்தில் இந்த புகைப்படத்தை Giorgia Hofer என்பவர் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவேற்றம் செய்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கூகுளில் Giorgia Hofer என்று மட்டும் டைப் செய்தோம். அப்போது அந்த நபரின் இணையதளம், இன்ஸ்டாகிராம் பக்கம் என பலவும் நமக்குக் கிடைத்தது.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தேடி எடுத்தோம். 2018ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி இந்த புகைப்படத்தை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். இத்தாலியன் மொழியில் அவர் பதிவிட்டிருந்தார். அதை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். அதில் அவர், “வானியல் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் (மென்பொருள்) கொண்டு ஒவ்வொரு 1481 நிமிடங்களுக்கும் (24 மணி நேரம் 41 நிமிடம்) சந்திரன் இருக்கும் நிலையை 27 நாட்கள் கணக்கிட்டேன். சந்திரனைத் தொடர்ந்து எல்லா நாளும் புகைப்படம் எடுக்க முடியாது. ஏனெனில் என் நாட்டில் வானிலை அதற்கு சாதகமாக இருக்காது. 2017ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி, ஜூலை, டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலவைப் படம்பிடித்தேன். இதற்காக 400 மிமீ டெலிஃபோட்டோ லென்சை பயன்படுத்தினேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive

இதன் மூலம் இது நிலவை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தொடர்ந்து 28 நாட்கள் புகைப்படம் எடுத்து உருவாக்கப்பட்ட புகைப்படம் இது இல்லை என்பது தெளிவாகிறது. பிரத்தியேக சாஃப்ட்வேரை பயன்படுத்தி 2017ம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை ஒன்று சேர்த்து இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக அதை வெளியிட்டவர் தெரிவித்துள்ளார். 

முழு நிலவு முதல் அமாவாசை பிறகு அமாவாசையிலிருந்து முழு நிலவு வரையிலான 28 நாட்கள் நிலவின் புகைப்படம் தான் இது. ஆனால், தொடர்ந்து 28 நாட்களில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பது உறுதியாகிறது.

முடிவு:

ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட நிலவின் அழகிய வலையம் புகைப்படத்தை தொடர்ந்த 28 நாட்கள் எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:28 நாட்கள் ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் வளையம் என்ற புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context