லண்டன் பேருந்தில் இஸ்லாமிய வாசகங்களை அச்சிட இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதா?
‘’லண்டனில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் இஸ்லாமிய வாசகங்கள் பரப்பப்பட வேண்டும்,’’ என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பஸ்களில் இஸ்லாமிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
லண்டன் பஸ்களில் இஸ்லாமிய வாசகங்கள் இடம் பெற்றிருப்பது போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் ஒன்றில், ஒரு படத்தின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட இருந்தது. அதில், "இங்கிலாந்து அரசின் உத்தரவு படி இன்று (திங்கட்கிழமை) முதல் லண்டன் பேருந்துகளில் பின்வரும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. "இறைத்தூதர் நபிகள் நாயகம், வாழ்க்கையின் ஒளி, உண்மையின் போதகர், அவரை நம்புகிறவர்களுக்கு வாழ்த்துகள் கிடைக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், "லண்டனில் ஓடும் அனைத்து பே௫ந்துக்களிலும் இஸ்லாமிய வாசகங்கள் பரப்பப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையயை ஏற்று லண்டன் மாநகரில் அனைத்து பே௫ந்துகளிலும் இஸ்லாமிய வாசகங்கள் பொறிக்கப்பட்டு வலம்வரும் காட்சி, சுபஹானல்லா, அல்லாஹ் மிகப்பொியவன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Rahmat Din என்பவர் 2020 மே 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மதம் சார்ந்த எந்த ஒரு ஆய்வையும் நாம் மேற்கொள்ளவில்லை. லண்டன் பஸ்ஸில் இஸ்லாமிய வாசகங்களை விளம்பரப்படுத்த இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம். இந்த பதிவில் மொத்தம் மூன்று படங்கள் வைத்துள்ளனர்.
அதில் ஒரு படம் சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த்தின் மனிதநேயத்தைப் பாராட்டி மலேசிய அரசு அவரது படத்தை விளம்பரம் செய்ததாக பகிரப்பட்டு வந்த பதிவில் இடம் பெற்றிருந்த படம் ஆகும். அது ஷட்டர் ஸ்டாக் என்ற புகைப்படங்கள் விற்பனை செய்யும் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று உறுதி செய்திருந்தோம். அந்த செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
லண்டன் பஸ்ஸில் இஸ்லாமிய வாசகங்களை விளம்பரம் செய்ய இங்கிலாந்து அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டதா, அது செய்தி உள்ளதா என்று கூகுளில் தேடியபோது நமக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, மற்ற புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது முதல் படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.
கடந்த 2015ம் ஆண்டு பிரான்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், இஸ்லாம் அமைதியை போதிக்கிறது என்பதை அறிவிக்கவும் இங்கிலாந்தின் மிகப் பழமையான இஸ்லாமிய அமைப்பு அரசு பஸ்களில் விளம்பரம் செய்துள்ளதாக செய்தி நமக்கு கிடைத்தது.
தொடர்ந்து தேடியபோது பிசினஸ் இன்சைடர், இன்டிபெண்டன்ட் உள்ளிட்ட ஊடகங்களில் 2016ம் ஆண்ட வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், சிரியா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் உதவுவதற்காக நிதி திரட்டும் வகையில் இஸ்லாமிக் ரிலீஃப் என்ற அமைப்பு இந்த விளம்பரத்தை செய்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இஸ்லாமிக் ரிலீஃப் யுகே என்ற ட்விட்டர் பக்கத்திலும் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்ட இருந்தன. அதிலும் "லண்டன் பேருந்துகளை நிதி திரட்டும் விஷயத்துக்கு பயன்படுத்த முடியுமா? முடியும்" என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம், முந்தைய ஆண்டு இஸ்லாமிய அமைப்பு வெளியிட்ட விளம்பரம் அடிப்படையில் இவர்கள் சிரியா போரில் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவ நிதி திரட்ட அதே யுக்தியை கையாள திட்டமிட்டது தெரிந்தது.
இதன் மூலம், 2015ம் ஆண்டில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களை போக்கவும் 2016ம் ஆண்டில் சிரியா போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்ட லண்டன் பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததை தற்போது இஸ்லாமிய வாசகங்கள் பரப்பப்பட வேண்டும் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதால் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்று தவறான தகவலை சேர்த்து பகிர்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.
Title:லண்டன் பேருந்தில் இஸ்லாமிய வாசகங்களை அச்சிட இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False