FACT CHECK: லண்டனில் வைக்கப்பட்டுள்ள அதிர்ஷ்டமான மாயன் வானியல் சக்கரம் என்று பரவும் வதந்தி!

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

லண்டனில் வைக்கப்பட்டுள்ள மாயன் வானியல் சக்கரத்தின் படம் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

மாயன் நாட்காட்டி போன்ற ஒன்றின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதனுடன், “படத்தில் உள்ள இந்த சக்கரம் மாயன்களின் வானியல் சாஸ்திரம் கண்டறிய பயன்படுவது. இது கண்டவுடன் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும். இதை எதிரி நாட்டவர் கண்ணில் படாமல் மறைத்து வைத்தனர். ஆனால் அந்நாடு மிகவும் ஏழ்மை நிலையை அடைந்தது. ஏனெனில் இந்த அற்புத தகடானது, அனைவர்க்கும் செல்வத்தை அளிப்பதற்கு கடவுளால் அருளப்பட்டது. தற்போது இந்த சக்கரத்தின் புகைப்படம் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இதை அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவர் இதனை அடையாளம் கண்டு இதை புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை அவர் நண்பருக்கு பகிர்ந்தார். அவருக்கு சில நாட்களிலே பதவி உயர்வு மற்றும் பெரிய பண உதவியும் கிடைக்கப்பட்டது. அதைப் பகிர மறுத்த அவர் நண்பர் தொழிலில் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. எனவே, பிறர்க்கு பகிர பகிற தான் இது அனைத்து பலன்களை அள்ளித் தரும். இந்த அதிர்ஷ்ட சக்கரத்தை பகிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த பதிவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணுக்கு எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி இது உண்மையா என்று வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த பதிவு தற்போது சமூக ஊடகங்களிலும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது மாயன் வானியல் சாஸ்திர சக்கரமா என்று ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

தென் அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த பூர்வ குடிகளான மாயன்களின் வானியல் சாஸ்திர சக்கர தகடு என்று குறிப்பிட்டுள்ளனர். இதை பகிர பகிரத்தான் பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த காலத்தில் இதை எப்படிப் பகிர்ந்திருப்பார்கள்… பகிராமலேயே எப்படி செல்வம் கொட்டியிருக்கும் என்று பல கேள்விகள் எழுந்தன. நம்பிக்கை சார்ந்த விவகாரங்களில் நாம் தலையிடவில்லை. இதை ஏராளமானவர்கள் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

இது மாயன் வானியல் சாஸ்திர சக்கரமா, லண்டனில் இது உள்ளதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். இந்த சக்கரத்தின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மாயன்கள் போன்ற அமெரிக்காவின் மற்றொரு நாகரீகமான ஆஸ்டெக் நாகரீகத்தின் சூரிய கல் என்று பதிவுகள் நமக்கு கிடைத்தன. மேலும் இது தற்போது லண்டனில் இல்லை, மெக்சிகோ நகரத்தில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 

அசல் பதிவைக் காண: ancient.eu I Archive

இந்த கல் 1470 முதல் 1521-க்குள்ளாக செதுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு ஆஸ்டெக் நாகரீகம் அழிந்தது. 1780ல் மெக்சிகோவில் தேவாலயம் புதுப்பிக்கும் பணியின் போது இந்த கல் கிடைத்தது. 1885ம் ஆண்டு வரை தேவாலயத்தின் சுற்றிலேயே இந்த சூரிய கல் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அருங்காட்சியகத்தில் இது வைக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக பல செய்திகள், வீடியோக்களும் நமக்கு கிடைத்தன.

தொடர்ந்து தேடியபோது, இந்த ஆஸ்டெக் நாட்காட்டியின் மாதிரியை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிந்தது. யார் வேண்டுமானாலும் சிறிய சைஸ் ஆஸ்டெக் நாட்காட்டியை வாங்கிக்கொள்ள முடியும்.

அசல் பதிவைக் காண: museumstorecompany.com I Archive

நம்முடைய ஆய்வில்,

இந்த சக்கர வடிவ நாட்காட்டி மாயன் நாகரீகத்துடன் தொடர்புடையது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது ஆஸ்டெக் நாகரீகத்தின் சூரிய கல் என்பது தெரியவந்துள்ளது.

இது லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இல்லை. மெக்சிகோ சிட்டியில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் மாயன் நாகரீக வானியல் சாஸ்திர சக்கரம் இது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள சக்கரம் ஆஸ்டெக் நாகரீகத்தின் சூரிய கல் என்பதையும் இது மெக்சிகோ சிட்டியில் இருப்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:லண்டனில் வைக்கப்பட்டுள்ள அதிர்ஷ்டமான மாயன் வானியல் சக்கரம் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •