
ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இரண்டு வகையான நீர் ஒன்றோடு ஒன்று சேராமல் தனியாக இருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில், “ராமேஸ்வரம்.. தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் “ஆனால்” இரண்டு கடல் தண்ணீரும் ஒன்றோடு ஒன்று கலக்காது..!!” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த பதிவை Athirajan என்பவர் 2021 மே 7ம் தேதி மனதை மயக்கும் 🎤📻🎻80&90s பாடல்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு அலாஸ்கா வளைகுடாவில் மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் சந்திக்கும் இடம் என்று இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த புகைப்படத்தின் கேப்ஷனை மட்டும் மாற்றி, ராமேஸ்வரம் – தனுஷ்கோடியில் கடல்கள் சேரும் இடம் என்று பரப்பி வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
உண்மையில் இது அலாஸ்கா வளைகுடாவில் எடுக்கப்பட்டதா அல்லது ராமேஸ்வரத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். அலாஸ்கா என்பது அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மத்திய தரைக்கடல் என்பது ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியாகும். அதாவது இது அமெரிக்காவுக்கு கிழக்குப் பக்கத்தில் உள்ளது. அலாஸ்கா வளைகுடா பகுதியில் உள்ள கடலுக்கு பசுபிக் பெருங்கடல் என்று பெயர். அப்படி இருக்கும்போது சம்பந்தமே இல்லாத அட்லாண்டிக் மற்றும் அலாஸ்கா வளைகுடாவை எப்படி தொடர்புபடுத்த முடியம் என்ற குழப்பம் எழுந்தது.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, யூடியூப் வீடியோ ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் அமெரிக்காவின் மிசிசிப்பி ஆறு மெக்சிகோ வளைகுடாவில் கலக்கும் காட்சி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. Marlin Magazine என்ற யூடியூப் பக்கம் இந்த வீடியோவை 2015ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி வெளியிட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: YouTube
மிசிசிப்பி ஆறு கடலில் கலப்பது பற்றி தேடியபோது, இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி இருப்பது தெரிந்தது. மிக அதிக அளவில் மிசிசிப்பி ஆற்றில் இருந்து வெளியேறி கடலில் சேரும் நல்ல தண்ணீர் உடனடியாக கடலின் உப்பு நீரோடு கலந்துவிடுவது இல்லை. நெடுந்தூரத்திற்குக் கருமையான நாடா போன்று இந்த நன்னீரானது உப்பு நீருடன் கலக்காமல் செல்கிறது என்று தகவல் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: wikipedia.org I Archive 1 I oceannetworks.ca I Archive 2
நம்முடைய ஆய்வில், பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் அலாஸ்கா வளைகுடாவில் இரண்டு கடல்கள் கலக்கும் காட்சி என்று பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு மார்லின் என்ற பத்திரிகை வெளியிட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மிசிசிப்பி ஆறு கடலில் கலக்கும் காட்சி என்று குறிப்பிட்டுள்ளது தொியவந்துள்ளது.
மிசிசிப்பி ஆறு கடலில் பல கி.மீ தூரத்துக்கு ஆற்றின் நன்னீர் உப்பு நீருடன் கலக்காமல் செல்கிறது என்று வெளியான செய்தி, ஆய்வுகள் நமக்கு கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், ராமேஸ்வரம் – தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் இணையும் இடம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மிசிசிப்பி ஆறு மெக்சிகோ வளைகுடாவில் சேரும் படத்தை ராமேஸ்வரம் – தனுஷ்கோடியில் எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ராமேஸ்வரம் – தனுஷ்கோடியில் கடல்கள் சேரும் இடம் என்று பகிரப்படும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
