FactCheck: மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரோஹிங்கியா மக்கள்?- உண்மை இதோ!
‘’மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, தொடர்ச்சியாக அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில், சிலர் ஊர்வலமாகச் செல்கின்றனர். அதில், ஒரு சிலர் மாலை அணிந்தபடி காணப்படுகின்றனர். அவர்களுக்கு, மக்கள் மரியாதை செலுத்தி, வாழ்த்து தெரிவிப்பதையும் காண முடிகிறது. இந்த வீடியோவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் எதுவும் கேட்கவில்லை. மாறாக, ‘ஹாஜி சஹாப் ஜிந்தாபாத்’ என்ற கோஷம் கேட்கிறது. வீடியோவின் 0.11 முதல் 0.18 நொடிகள் வரை ‘’Hamara Pradhan Kaisa ho? Haji Sahab Jaisa ho,’’ என்ற கோஷத்தை, மக்கள் எழுப்புகின்றனர். இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால், How should are head be? Like Haji Sahab என்று வருகிறது.
ஒரு வயதான நபருக்கு, தொடர்ச்சியாக மக்கள் இந்த வீடியோவில், மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதையும், அவர் பின்னே கூட்டமாக அணிவகுத்துச் செல்வதையும் கண்டோம். எனவே, இது ஏதேனும் தேர்தல் வெற்றி அல்லது கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும் என்பது சந்தேகமின்றி உறுதியானது.
இதுதவிர இந்த வீடியோவின் 1.16வது நிமிடத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் சற்று மங்கலாக தெரிந்தது. அதன் தொடக்க எண் UP 10 என்று உள்ளது.
இதன்படி, UP என்றால், உத்தரப் பிரதேச பதிவெண் கொண்ட இருசக்கர வாகனம் இது என தெரியவருகிறது. மேற்கு வங்கம் எனில், WB என்றுதான் வாகனப் பதிவு எண் இருக்கும்.
இதன்பேரில், நாமும் வித விதமான கீவேர்ட் பயன்படுத்தி, தகவல் தேடியபோது, உத்தரப் பிரதேச மாநிலம், Bahraich என்ற இடத்தில் நிகழ்ந்த பஞ்சாயத்து தேர்தலில், ஹாஜி அப்துல் காலிம் பொதுமக்கள் பஞ்சாயத்து தேர்தல் வெற்றியை கொண்டாடியபோது, இப்படி ஊர்வலமாகச் சென்றனர் என தெரியவந்தது. இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
Amarujala News Link I Archived Link
இதன்படி, பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற ஹாஜி அப்துல் காலிம் என்பவரை வாழ்த்தி, பஹ்ரைச் பகுதி மக்கள் ஹாஜி சஹாப் ஜிந்தாபாத் என கோஷமிட்டுள்ளனர்.
அதனை தவறாகப் புரிந்துகொண்டு, சில இந்தி ஊடகங்கள், பஹ்ரைச் மக்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறி கோஷமிட்டதாக, செய்தி வெளியிட்டிருக்கின்றன.
News 18 Hindi Link I Archived Link
ஊடகங்களில் இப்படி செய்தி வெளியானதை தொடர்ந்து, பஹ்ரைச் பகுதி போலீசார் விளக்கம் அளித்திருக்கின்றனர்.
எனவே, இந்த செய்தியில் சிலர் கூடுதல் தகவலை சேர்த்து, மேற்கு வங்கத்தில் உள்ள ரோஹிங்கியா மக்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டதாக, வதந்தி பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரோஹிங்கியா மக்கள்?- உண்மை இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False