வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மிக உயரமான சிவலிங்கம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "400 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர். முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் காசியில் ஞானவாபி மசூதியில் கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து. அங்குள்ள பெரிய கிணற்றின் நீரை இறைத்து வெளியேற்றிய போது 12.8 அடி உயரமுள்ள சிவலிங்கம் தெரிந்தது. இப்போது வெளியே உள்ள பெரிய நந்திக்கு நேர் எதிரில் சிவலிங்கம் உள்ளது. நந்தியம் பெருமானின் இடைவிடாத தவம் வெற்றி பெற்று விட்டது ... இது தான் 12 அடி லிங்கம் கண்டெடுக்கப்பட்ட காசி ஞானவாபி மசூதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Suthirmurugan S என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2022 மே 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து சிவ லிங்கம் இருக்கும் பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது, அந்த பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குளத்தில் இருப்பது சிவலிங்கம் இல்லை, செயற்கை நீரூற்று என்று மசூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவ லிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்ய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: hindu-blog.com I Archive 1 I odikala.com I Archive 2

அப்போது, அந்த சிவலிங்கம் ஒடிஷா மாநிலத்தில் பாலசோர் அருகே உள்ள பாபா புசண்டேஸ்வர் கோவிலின் 12 அடி சிவலிங்கம் என்று செய்திகள் பல நமக்குக் கிடைத்தன. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தை 2015ம் ஆண்டு வெளியான பிளாக் பதிவிலும் பயன்படுத்தியிருந்தனர்.

ஞானவாபி மசூதி விவகாரம் 2022 மே மாதம் மத்தியில் கிளப்பப்பட்டது. மே 16, 2022ல் தான் மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், அதனால் சிவலிங்கம் உள்ள பகுதிக்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் செய்திகள் வெளியானது. அப்படி இருக்கும் போது இது ஞானவாபி மசூதியில் எடுக்கப்பட்ட படம் என்று ஒடிஷா சிவலிங்க படத்தை விஷமத்தனத்துடன் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று பகிரப்படும் படம் ஒடிஷாவில் உள்ளது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False