FactCheck: கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய திமுக.,வினர்; உண்மை என்ன?

அரசியல் சமூக ஊடகம்

‘’கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய எதிர்க்கட்சியினர்,’’ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

பிப்ரவரி 26, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இன்று அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தமாம். கரூரில் பொறுப்பாக போராட்டத்தை அஹிம்சை முறையில் வலியுறுத்திய எதிர்க்கட்சியினர். 1965 இந்தி போராட்டத்தின்போது கரூரில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை உயிரோடு கொளுத்தியவர்கள் இவர்களின் முன்னோர்கள்தான். இன்னமும் மாறவில்லை,’’ என்று தலைப்பிட்டு, ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில், பேருந்து நிலையம் ஒன்றின் உள்ளே நுழையும் சில நபர்கள், திமுக கொடியை கையில் பிடித்தபிடி இரும்புக் கம்பியால் அங்குள்ள பேருந்துகளை சுற்றி வளைத்து தாக்கியபடி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைப் பலரும் தற்போது நிகழ்ந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் சார்பாக, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால், தமிழ்நாட்டில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் 2021 நெருங்கிய நிலையில், இந்த வேலை நிறுத்தம் பொதுமக்களை பாதிப்பதாக உள்ளதென்று, விமர்சனம் எழுந்தது.

திடீரென இந்த வேலைநிறுத்தத்தை சமீபத்தில் தொழிற்சங்கத்தினர் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

The Hindu Link

இந்த சூழலில்தான், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கண்டித்து, திமுக.,வினர் (எதிர்க்கட்சி) கரூரில் பேருந்துகளை தாக்கியதாகக் கூறி, மேற்கண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உண்மையில், இது 2017ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்ததாகும். இதுதொடர்பாக, நாம் கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம் அவர்களை (9942904717) தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். குறிப்பிட்ட வீடியோவை பார்வையிட்ட அவர், ‘’கடந்த ஒரு மாதத்தில் இத்தகைய சம்பவம் எதுவும் கரூர் பேருந்து நிலையத்தில் நடைபெறவில்லை. எனவே, இதற்கும் சமீபத்தில் நடைபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை,’’ என்றார்.

இதுபற்றி நாம் கூடுதல் விவரம் தேடியபோது, கரூர் திமுக வட்டாரத்தில் தகவல் கேட்டோம். அவர்கள், இது 2017ம் ஆண்டில் நிகழ்ந்தது. தற்போது அல்ல என்று குறிப்பிட்டனர்.

இதன்படி, இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த செய்தியும் இதனை உறுதி செய்வதாக அமைந்தது.

Velsmedia.com Link

குறிப்பிட்ட இணையதள ஆசிரியர் கோபிநாத் அவர்களை நாம் தொடர்புகொண்டு பேசினோம். அவர், ‘’2017ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு கோரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வெளியேற்றப்பட்டனர். மு.க.ஸ்டாலினை சிலர் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. அதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுக்க 2017 பிப்ரவரி 18 தேதியில் திமுக.,வினர் பல இடங்களில் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்படி கரூரில் நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோதான் இது. இதற்கும், தற்போதைய வேலைநிறுத்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தகவலை எனக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப குழுவினர் அளித்தனர்,’’ என்று குறிப்பிட்டார்.

இதன்பேரில், இணையத்தில் கூடுதல் விவரம் தேடியபோது, 2017 பிப்ரவரி 18 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான செய்திகளும், அதையொட்டி திமுக.,வினர் ஆர்ப்பாட்டங்கள் செய்தது தொடர்பான வீடியோக்களும் காண கிடைத்தன.

The Hindu Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) கடந்த ஒரு மாதத்தில் இத்தகைய தாக்குதல் சம்பவம் எதுவும் கரூரில் நடைபெறவில்லை. இதற்கும், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

2) 2017ல் நிகழ்ந்த வீடியோவை எடுத்து, தற்போது நிகழ்ந்ததுபோல கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர். அதில் இருப்பவர்கள் திமுக.,வினர் என்றாலும், அதற்கும் தற்போதைய அரசியல் நிகழ்வுக்கும் தொடர்பில்லை.

எனவே, பழைய வீடியோவை எடுத்து, புதியதுபோல தகவல் சேர்த்து பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய திமுக.,வினர்; உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False