இந்தியை எதிர்த்து கடுமையாக போராடிய ஸ்டாலின் என்று பகிரப்படும் வீடியோ… உண்மை அறிவோம்!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியைக் கடுமையாக எதிர்த்துப் போராடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வங்க மொழி பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “திமுக தலைவர் #இந்தியை எதிர்த்து கடுமையாக #போராடிய தருணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை IT&SM BJP Kanyakumari என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 செப்டம்பர் 8ம் தேதி பகிர்ந்துள்ளது. இதை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமூக ஊடகங்களில் இந்தி மொழி தெரியாது போடா டிரெண்ட் ஆன பிறகு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஸ்டாலின் வங்க மொழியில் பேசுகிறார். அவர் என்ன மொழி பேசுகிறார் என்று தெரியாமலேயே அவர் இந்தி பேசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

மேலும், ஒரு வேளை ஃபேஸ்புக் பதிவர் கூறியது போல இந்தி எதிர்ப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினாரா என்றும் ஆய்வு செய்தோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த மிக பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வங்க மொழியில் பேசியிருந்தார். அதற்கு முன்போ, பின்போ அவர் வங்கத்தில் பேசியதாக நினைவில் இல்லை. எனவே, அது தொடர்பான செய்தி மற்றும் வீடியோவைத் தேடி எடுத்தோம்.

oneindia.comArchived Link 1
hindustantimes.comArchived Link 2

அது 2019ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் பொதுக் கூட்டம் என்று செய்தி வெளியாகி இருந்தது. அந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். அது இந்தி எதிர்ப்பு மாநாடாக இருந்திருந்தால் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருக்க மாட்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதன் முழு வீடியோவும் கிடைத்தது. “தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசுவார். அவர் தமிழில் பேச அதை வங்க மொழியில் மொழி பெயர்த்து சொல்வார்கள்” என்று மம்தா பானர்ஜி அறிமுகம் செய்கிறார்.

தொடர்ந்து ஸ்டாலின் வங்க மொழியில் தன்னுடைய பேச்சைத் தொடங்கி சில வாக்கியங்கள் வங்கத்தில் பேசிவிட்டு, பிறகு தமிழில் தொடர்கிறார். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சிகள் இந்த வீடியோவில் இருப்பதைக் காண முடிந்தது. இந்த வீடியோவை எடுத்து தவறான தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,

ஸ்டாலின் வங்க மொழியில் பேசியது தொடர்பான செய்தி, வீடியோ கிடைத்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் ஸ்டாலின் இந்தியில் பேசவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசிய அந்த பொதுக் கூட்டம் இந்திக்கு எதிரானது இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. 

இதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் இந்தியை எதிர்த்து கடுமையாக போராடிய தருணம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திமுக தலைவர் இந்தியை எதிர்த்து கடுமையாக போராடிய தருணம் என்று பகிரப்படும் வீடியோ… உண்மை அறிவோம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •