கும்பமேளாவில் மூன்று தலை யானை என்று பரவும் வீடியோ உண்மையா?

False Religion தேசிய அளவில் I National

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்ப மேளாவில் மூன்று தலை யானை காணப்பட்டது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மூன்று தலையுடைய யானை ஒன்று நடந்து வருவது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் காணப்பட்ட மூன்று தலை கஜராஜ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மூன்று தலை யானை உலகிலிருந்திருந்தால் அது பற்றி எப்போதோ செய்தி வெளியாகி இருக்கும். அப்படி ஒன்று இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மூன்று தலை யானை காணப்பட்டது என்று சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.

வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. எனவே, இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது தாய் (தாய்லாந்து) மொழியில் 202 ஏப்ரலில் வெளியான சில வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. 

அதில், தாய்லாந்து நாட்டில் நடைபெறும் கோன் குங் ஶ்ரீ திருவிழாவின் போது நடைபெற்ற மூன்று தலை யானை ஊர்வலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தெளிவான அந்த வீடியோக்களில் யானைக்கு இரு பக்கமும் கூடுதலாக பொம்மை தலைகள் வைக்கப்பட்டிருந்ததைத் தெளிவாகக் காண முடிந்தது. 

தொடர்ந்து தேடிய போது 2024 மே 31ம் தேதி இதே வீடியோவை சிலர் தாய் மொழியில் யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்ததைக் கண்டுபிடித்தோம். அதில் தாய்லாந்தின் உலகப்புகழ் பெற்ற அயுத்தயா கோன் (Ayutthaya Khon) அணிவகுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மகா கும்ப மேளா 2025 ஜனவரியில் தொடங்கியது. ஆனால் இந்த வீடியோவோ 2024 மே மாதம் தாய்லாந்தில் எடுக்கப்பட்டது என்று யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது தெளிவாகிறது.

முடிவு:

தாய்லாந்தின் யானை ஊர்வல வீடியோவை எடுத்து மகா கும்பமேளாவில் காணப்பட்ட மூன்று தலை யானை என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கும்பமேளாவில் மூன்று தலை யானை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False