
ஹைதராபாத்தில் மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மீன்கள் வீடுகளில் நிறைந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
வீட்டுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் மிகப்பெரிய மீன்கள் நீந்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் ஒரு நபர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார், பிறகு இந்தி போன்ற மொழியில் ஏதோ சொல்கிறார்.
வீடியோவில், “ஹைதராபாத்தில் ஒரு வீட்டுக்குள்ளே, கொடுத்து வச்சவங்க, வேளாவேளைக்கு பிரெஷ்ஷா மீன் பொரிச்சு சாப்பிடலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Zubair Raja என்பவர் 2020 அக்டோபர் 18ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 2020 மத்தியில் கன மழை பெய்தது. ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் மழை வெள்ளம் காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. தெலங்கானாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் வீட்டுக்குள் நுழைந்த மீன் என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. தற்போது அங்கு மழை வெள்ள பாதிப்பு உள்ள நிலையில் இந்த வீடியோ ஹைதராபாத் நகரில் தற்போது எடுக்கப்பட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
வீடியோவில் ஹைதராபாத் என்றால் தெலுங்கில் வீடியோ வெளியிட்டிருக்கலாம், ஆனால் இது என்னுடைய வீடு, முழுக்க மீன் உள்ள வீடு என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பிறகு இந்தியில் பேசுவது போல உள்ளது. என்ன சொல்கிறார், ஐதராபாத்தில் இப்படி உள்ளது என்று சொல்கிறாரா என்று இந்தி தெரிந்தவர்களிடம் கேட்ட போது, “அங்கு மீன், இங்கு பெரிய மீன் என்றுதான் சொல்கிறார்கள். எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் அதில் இல்லை” என்றனர்.
எனவே, இந்த வீடியோவின் காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பாகிஸ்தானின் கராச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று dailymotion.com என்ற ஊடகத்தில் இந்த வீடியோ 2020 ஆகஸ்ட் 23ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ தற்போது 2020 அக்டோபர் மாதம் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.
அசல் பதிவைக் காண: dailymotion.com I Archive
தொடர்ந்து தேடிய போது பாகிஸ்தானின் கராச்சியில் ஆகஸ்ட் 2020ல் கன மழை பெய்தது பற்றிய செய்திகள் கிடைத்தன. பலரும் இந்த வீடியோவை கராச்சியில் எடுக்கப்பட்டது என்று பகிர்ந்திருந்தனர்.
இவற்றுக்கு நடுவே, மத்தியப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்று சிலர் பகிர்ந்திருந்த வீடியோவும் நமக்கு கிடைத்தது. வாரங்கல்லில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தெலுங்கு செய்தி சேனல் ஒன்று ஆகஸ்ட் 26, 2020 அன்று பகிர்ந்திருப்பதும் தெரிந்தது.
முதன் முதலில் கராச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மீன் என்று 2020 ஆகஸ்ட் 23ம் தேதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு சில நாட்கள் கழித்து இந்தியாவின் மத்தியப் பிரதேசம், வாரங்கல் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. இதன் மூலம் இந்த வீடியோ உண்மையில் எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றிய குழப்பமே நிலவுகிறது. அதே நேரத்தில் இந்த வீடியோவுக்கும் அக்டோபர் 2020ல் ஐதராபாத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
ஹைதராபாத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வீடுகளுக்குள் புகுந்த மீன்கள் என்று பகிரப்படும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டது இல்லை என்று தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஹைதராபாத் மழை வெள்ளம்; வீட்டுக்குள் மீன்- பழைய வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
